‘பூத்’ கமிட்டியில் இளைஞர்களை நியமிக்க அதிமுக உத்தரவு: வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
மதுரை ‘பூத்’ கமிட்டியில் இளைஞர்களை நியமிக்க முதல்வரும், துணை முதல்வரும் உத்தரவிட்டுள்ளதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் நேற்று திருமங்கலத்தில் நடைபெற்றது. இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.எம்.பரமசிவம் தலைமை வகித்தார்.. மாவட்ட பாசறை செயலாளர் எம்.ஆர்யா முன்னிலை வகித்தார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர் பி உதயகுமார் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இளைஞர் இளம்பெண் பாசறை இணைச் செயலாளர் முத்துச்சாமி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் , ஜெ., பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி ,பஞ்சம்மாள், பஞ்சவர்ணம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயகுமார் பேசியதாவது;
காங்கிரஸ் இயக்கத்தைக் எடுத்துக்கொண்டால் அங்கு தொண்டர்கள் இல்லை என்ற நிலை உருவாகி அங்கு தலைவர்களின் விழாவை கூட கொண்டாட ஆளில்லை. ஆனால், அதிமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இளைஞர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சம் கொண்ட ஒரே இயக்கம் அதிமுகதான். பூத் கமிட்டியில் இளைஞர் பாசறை நிர்வாகிகளை நியமிக்க முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உத்தரவிட்டுள்ளனர்.
நான் பூத் கமிட்டியில் உறுப்பினராக சேர 15 ஆண்டுகாலம் காத்திருந்தேன். ஆனால் இன்றைக்கு உறுப்பினராக சேர்ந்தவுடன் இளைஞர்களுக்கு பூத் கமிட்டி தேடி வர உள்ளது. பூத் கமிட்டி உறுப்பினர் பதவி சாதாரணமல்ல ஏனென்றால் ஓட்டு பதிவின் போது கவனத்துடன் செயல்பட வேண்டும் அசந்தால் எதிர்க்கட்சிகள் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள். ஆகவே நீங்கள் சிங்கமென கர்ஜித்து விழிப்புடன் இருக்க வேண்டும். விசுவாசத்துடன் இருந்தால் அதிமுகவில் பதவிதேடி வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
