

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியனுக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வந்த பெ.சுப்பிரமணியன் (28) கடந்த 18.08.2020 அன்று மணக்கரை அருகே ரவுடியைக் கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் உயிரிழந்தார்.
அவருக்கு தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் இன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தி, அவருடைய புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது எஸ்பி ஜெயக்குமார் பேசும்போது, ''காவலர் சுப்பிரமணியனின் இழப்பு, அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். அவர் நினைத்திருந்தால் தப்பியோடிய ரவுடியைப் பிடிக்காமல் விட்டு உயிர் தப்பியிருக்கலாம். ஆனால் கடமைதான் முக்கியம் என்று கருதி, தனது உயிரையும், தனது குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் ரவுடியைப் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட தாக்குதலில் வீர மரணடைந்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலைச் சமர்ப்பிக்கிறோம்'' என்றார் எஸ்பி.
நிகழ்ச்சியில் கால்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் செல்வன், கோபி, துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ், இளங்கோவன், பழனிக்குமார், ஆய்வாளர்கள் பாலமுருகன், ஜாகீர் உசேன், அன்னபூரணி, கஸ்தூரி, காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் சுப்பையா, சங்கரன், கண்காணிப்பாளர்கள் மயில்குமார், கணேசபெருமாள், மாரியப்பன், மாரிமுத்து, நம்பிராஜன் மற்றும் காவல் துறையினர், அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.