

தமிழகத்தின் 2-வது தலைநகராக மதுரையை அறிவித்தே ஆக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழகத்தின் தலைநகரமாக சென்னை உள்ளது. ஆனால், தமிழின் தலைநகரம் என்ற பெருமை மதுரைக்கு மட்டுமே சொந்தம். மதுரை தமிழ் அன்னையின் பூமி. மதுரையை 2-வது தலைநகரமாகக் கொண்டு வரவில்லை என்பது, தமிழின் பழமையை, தமிழரின் பழமையை நாம் ஏற்க மறுப்பதாகும்.
பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து இப்போது வரை எந்தவொரு வளர்ச்சியும் கிடையாது. வேலை வாய்ப்பும் இல்லை. தமிழின் பெயரைச் சொல்லி 60 ஆண்டுகள் வரை ஆண்டனர். மதுரைக்கோ, தமிழிக்கோ எந்த பெருமையும் கிடைக்கவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, மதுரையில் தமிழ் அன்னையின் சிலையை வைக்க வேண்டும் என கூறினார். ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி நடக்கும் தமிழக அரசு, தமிழின் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும்.
தமிழ் அன்னையின் மிக பிரம்மாண்டமான சிலை எழுப்பி, சங்க காலத்தில் தமிழை வளர்க்க முயற்சிகளை மேற்கொண்டவர்கள் குறித்து உலகுக்குக் கற்பிக்கும் வகையில் பல்கலைக்கழகமாக பெரிய மையம் ஏற்படுத்த வேண்டும். அது உலக வரைபடத்தில் வரக்கூடிய அளவுக்குக் கொண்டு வர வேண்டும். மதுரை, ராமநாதபுரம் தொழில் நகரங்களாக மாறக்கூடிய வகையில், மதுரையை 2-ம் தலைநகராக அறிவித்தே ஆக வேண்டும்.
அனைத்துக் கருத்துகளிலும் அதிமுக எங்களுடனும், நாங்கள் அவர்களுடனும் ஒத்து போகிறோம் எனச் சொல்ல முடியாது. ஆனால், விநாயகர் சதுர்த்தி விழா என்பது பாஜகவின் விழா இல்லை. தமிழக மக்களின் விழா. தேச பக்தியை, நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காக 1893-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்காரரான பாலகங்காதர திலகர்தான் விநாயகரை வெளியே வைத்து வழிபாட்டைத் தொடங்கினார். இது இந்துக்களின் பண்டிகை அல்ல. இது தேசிய ஒருமைப்பாட்டின் பண்டிகை. எனவே, தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று, பாஜக அங்கம் வகிக்கக்கூடிய அரசுதான் அமையும்'' என்றார் அவர்.