

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற வேலூர் மாவட்ட நடிகர் சங்கம் சார்பில் குடியாத்தம் பகுதியில் இன்று கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில், தான் நலமாக இருப்பதாக வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பி.யின் உடல் நிலை கடந்த 13-ம் தேதி மோசமடைந்தது.
இதைதொடர்ந்து, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி.க்கு வென்டிலேட்டர், எக்மோ கருவிகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர்காக்கும் மருத்துவ கருவிகளை கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், எஸ்.பி.பி.யின் நெருங்கிய நண்பரும் பிரபல இசையமைப்பாளருமான இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் எஸ்.பி.பி. உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்றும், அதற்காக உலகில் உள்ள எஸ்.பி.பி.யின் ரசிகர்கள், திரைப்பட நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பின்னணி பாடகர்கள் என அனைவரும் இன்று (ஆக.20) மாலை 6 மணியளவில் அவரவர் வீட்டில் இருந்தபடியே கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்படி, வேலூர் மாவட்ட நடிகர் சங்கம் மற்றும் நாடக கலைஞர்கள் ஒன்றிணைந்து குடியாத்தம் படவேட்டம் கோயில் அருகே இன்று கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பிரபல சண்டைப்பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, எஸ்.பி.பி. உடல் நலம் பெற வேண்டி கற்பூரம் ஏற்றி இறைவனை வழிபட்டார். இதைத்தொடர்ந்து, நூற்றுக்கணக்கான நாடக நடிகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.