

நீலகிரி மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலராக உள்ள கார்த்திக் தனது மகளை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார். தானும் அரசுப்பள்ளியில் படித்ததாகவும், தனது மகள்களையும் அதே பள்ளியில் தான் சேர்க்க முடிவு செய்ததாகவும் கூறினார்.
கரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது.
பல மாத முடக்கத்துக்குப் பின் தற்போது மெல்லத் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குன்னூர் வட்டாரக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வரும் கார்த்திக், இன்று (ஆக.20) தனது சொந்த ஊரான நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மனைவி தீபாவுடன் சென்று தன் மகள் அனன்யாவை முதல் வகுப்பில் சேர்த்துள்ளார்.
தான் படித்த பள்ளியில் தான் தனது மகள்களும் படிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகளை சேர்த்ததாக கூறினார் கார்த்திக்.
அவர் கூறும் போது, "என் சொந்த ஊர் நஞ்சநாடு. நஞ்சநாட்டில் உள்ள பள்ளியில் தான் நான் படித்து, தற்போது வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு பணி குன்னூரில் கிடைத்தது. இதனால் குன்னூர் கேந்திர வித்யாலயா பள்ளியில் சேர்க்க இருந்தேன். பணியில் சேர்ந்ததும், நான் படித்த நஞ்சநாடு பள்ளியில் எனது குழந்தைகளும் சேர்க்க முடிவு செய்தேன்.
ஆனால், எனது எதிர்பார்ப்புக்கு மாறாக நஞ்சநாடு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. எங்கள் கிராமத்தை சுற்றி பல தனியார் பள்ளிகள் முளைத்தன.
தனியார் பள்ளிகளின் கவர்ச்சியால், எங்கள் ஊர் மக்களே தங்கள் குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்த்தனர்.
இதனால், நஞ்சநாடு பள்ளியில் மாணவர்கள் இல்லாமல் மூடப்படும் நிலைக்கு சென்றது.
இதை தடுத்தே ஆக வேண்டும் என முடிவு செய்த எங்கள் ஊர் இளைஞர்கள் ஒன்றிணைந்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க பிரச்சாரம் மேற்கொண்டோம்.
இதன் பயனாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 14 மாணவர்கள் மட்டுமே இருந்த இந்தப் பள்ளியில் தற்போது 142 பேர் படிக்கின்றனர்.
தனியார் பள்ளிகளை பெற்றோர் நாட முதல் காரணம் ஆங்கிலம். இதனால், நஞ்சநாடு பள்ளியை ஆங்கில வழி பள்ளியாக மாற்றி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்களை நியமித்து எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
என்னுடைய முதல் மகளை இந்தப் பள்ளியில் சேர்த்து எல்கேஜி, யுகேஜி படிக்க வைத்து, இந்தாண்டு முறையாக பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்த்துள்ளேன். இரண்டாவது மகளையும் இங்கு தான் சேர்த்து படிக்க வைப்பேன்" என்றார்.
நஞ்சநாடு இளைஞர்கள் கூறுகையில், "நஞ்சநாடு பள்ளியில் அனைத்து வகுப்புக்கும் ஆங்கில வழிப் பிரிவையும் கொண்டுவர ஏற்பாடு செய்தோம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான ரூபாயை செலவழிக்க வேண்டிய நிலை பெற்றோருக்கு உள்ளது. தனியார் பள்ளிக்கு பெரும் தொகையை ஏன் செலவழிக்க வேண்டும்? அதற்கு பதிலாக அரசு பள்ளியை மேம்படுத்தினால் மாணவர்கள் பயனடைவார்கள் என்பதால், நாங்கள் ஒன்றிணைந்து மக்களிடம் நன்கொடை பெற்று நஞ்சநாடு பள்ளியை மேம்படுத்தி, கல்வித்துறை உதவியுடன் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கினோம்.
அந்த வகுப்புகளுக்கு பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்களை நியமித்து, தரமான கல்வியை கிடைக்க வழிவகை செய்துள்ளோம். ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா கல்வி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையை தொடங்கி, அதன் மூலம் ஊரக குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்படுகிறது" என்றனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டை, தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து உடைத்துள்ளார் குன்னூர் வட்டார கல்வி அலுவலர் கார்த்திக்.