

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பு:
“தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக நீலகிரி மாவட்டம் தாலுகா ஆபீஸ் பந்தலூரில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆகஸ்ட் 20 அன்று தென் மேற்கு மற்றும் அரபிக்கடல், ஆந்திரா, ஓடிசா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர் அலை முன்னறிவிப்பு: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்டு 20/2020 இரவு 23.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.