மக்கள் பயன்பெறும் இடத்தில் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை அமையுங்கள்: கடையநல்லூர் எம்எல்ஏ கோரிக்கை

மக்கள் பயன்பெறும் இடத்தில் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை அமையுங்கள்: கடையநல்லூர் எம்எல்ஏ கோரிக்கை
Updated on
1 min read

மக்கள் பயன்பெறும் இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்று கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தளாளனுக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

''தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரப்பேரியில் அமைப்பதற்கு பல்வேறு கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் 2 முறை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வந்து போகக்கூடிய, போக்குவரத்து வசதிகள் உள்ள இடத்தில் அமைய வலியுறுத்தியும், பல்வேறு இடங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி நேரிலும் பல முறை மனுக்கள் கொடுத்துள்ளோம்.

ஆயிரப்பேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க உள்ள இடம் சதுப்பு நிலம். மூன்று புறமும் குளம் உள்ளது. போக்குவரத்து வசதியே செய்ய முடியாது. ஆண்டுக்கு 7 மாதங்கள் வரை தண்ணீர் நிற்கும் பகுதி என்பதை சுட்டிக்காட்டியுள்ளேன். பொதுமக்களுக்கு வசதியுள்ள இடத்தில்தான் ஆட்சியர் அலுவலகம் அமையும் என்று சொன்னீர்கள். ஆனால் தற்போது ஆயிரப்பேரியில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப் பல்வேறு இடங்கள் இருப்பதை நானும், எதிர்க்கட்சிகளும் பல சமூக அமைப்புகளும் சுட்டிக்காட்டி உள்ளோம். தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அந்த இடத்தைத் தர உபயதாரர்கள் சம்மதம் தெரிவிப்பதாகவும் சொல்கிறார்கள். கல்வித்துறை ஒப்புதல் பெற்றால் மட்டும் போதுமானது. இந்த இடத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைந்தால், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை என மக்கள் வந்து செல்லும் இடமாகவும் ,போக்குவரத்து வசதியுள்ள இடமாகவும் இருக்கும்.

மங்கம்மா சாலை அருகே உள்ள அரசு நிலம், இலத்தூர் அருகே உள்ள இந்து சமய அறநிலையத்துறை இடம் என பல்வேறு இடங்கள் உள்ளன. எனவே, யாருக்கும் உகந்ததாக இல்லாத ஆயிரப்பேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைவதை மறுபரிசீலனை செய்து, மக்கள் பயன்பெறும் இடத்தில் அமைக்க வேண்டும்''.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in