Last Updated : 20 Aug, 2020 05:08 PM

 

Published : 20 Aug 2020 05:08 PM
Last Updated : 20 Aug 2020 05:08 PM

காவலரை வெடிகுண்டு வீசிக் கொலை செய்த ரவுடி உடல் வீச்சரிவாளுடன் அடக்கம்: வைரலாகும் வீடியோ

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே காவலரை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்த ரவுடி துரைமுத்து உடல், வீச்சரிவாளுடன் அடக்கம் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள மேல மங்கலக்குறிச்சியைச் சேர்ந்த பிச்சையா பாண்டியன் மகன் துரைமுத்து (30). இவர் மீது 4 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் துரைமுத்து வல்லநாடு அருகே மணக்கரை பகுதியில் மலை அடிவாரத்தில் பதுங்கியிருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உதவி ஆய்வாளர் முருகபெருமாள் உள்ளிட்ட தனிப்படை போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது துரைமுத்து உள்ளிட்ட 4 பேர் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கியிருந்தனர். அவர்களைப் போலீஸார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து துரைமுத்து தப்பியோடினார். அவரைப் போலீஸார் துரத்திச் சென்று பிடிக்க முயன்றனர்.

அப்போது தன்னிடம் இருந்த நாட்டுவெடிகுண்டைத் தூக்கி போலீஸார் மீது துரைமுத்து வீசினார். இந்த குண்டு காவலர் சுப்பிரமணியன் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் பலத்த காயமடைந்த அவ,ர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் ரவுடி துரைமுத்துவும் பலத்த காயமடைந்தார். அவரைப் போலீஸார் மீட்டு தங்கள் வாகனத்திலேயே திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே துரைமுத்து இறந்தார். அவருடன் பதுங்கியிருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

காவலர் சுப்பிரமணியன் மற்றும் ரவுடி துரைமுத்து ஆகிய இருவரது உடல்களும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டன. காவலர் உடல் அவரது சொந்த ஊரான ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளை கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலையில் முழு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக டிஜிபி த்ரிபாதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ரவுடி துரைமுத்துவின் உடல் நேற்று மாலை 4.30 மணியளவில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பெற்றுக் கொண்டனர். பின்னர் உடலை அவரது சொந்த ஊரான ஏரல் அருகேயுள்ள மேல மங்கலகுறிச்சிக்குக் கொண்டு சென்றனர்.

துரைமுத்துவின் உடலைத் தகனம் செய்ய முடிவு செய்திருந்த உறவினர்கள், திடீரென அந்த முடிவை மாற்றி வீட்டருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்தனர். அவரது உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். உடலை அடக்கம் செய்யும் போது உடல் மீது பெரிய வீச்சரிவாள் ஒன்றையும் வைத்து அடக்கம் செய்தனர். இந்த வீடியோ, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏரல், மங்கலகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே துரைமுத்துவுடன் பதுங்கியிருந்து போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவரது சகோதரர் சுவாமிநாதன், வனத்துறை ஊழியர் சுடலைக்கண்ணன், சிவராமலிங்கம் ஆகிய மூவரையும் முறப்பநாடு போலீஸார் நேற்று மாலை ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் தமிழரசு உத்தரவிட்டதை தொடர்ந்து மூவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x