புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கம்

இனாம் மணியாச்சி விலக்கு அருகே நடந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
இனாம் மணியாச்சி விலக்கு அருகே நடந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
Updated on
1 min read

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது.

வருமான வரி செலுத்தாதோர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். கரோனா நீடிக்கும் வரை ஒரு நபருக்கு 10 கிலோ வீதம் உணவு தானியம் இலவசமாக வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி நகர்ப்புறத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை வாழ்விடத்துக்கு அருகேயே உருவாக்க வேண்டும். வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் ஒதுக்கி பொது சுகாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலை ஊக்குவிக்கும் சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும். உணவு தானியங்களைத் தட்டுப்பாடின்றி மாநிலங்களை விட்டு மாநிலங்கள் கொண்டு செல்லும் சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது.

தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை விற்பனைப் பொருளாக மாற்றுவதைக் கைவிட வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020-ஐத் திரும்பப் பெற வேண்டும். இ-பாஸ் முறையைக் கைவிட்டு, பொதுப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் இன்று நடந்தது.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த மக்கள் இயக்கத்துக்கு நகரச் செயலாளர் எல்.பி.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன் தொடங்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முருகன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.உமா சங்கர், நகரக்குழு உறுப்பினர்கள் சக்திவேல்முருகன், சக்கரையப்பன், மாதர் சங்க செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். தொடர்ந்து மக்களைச் சந்தித்துக் கோரிக்கைகளை விளக்கி துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

இதே போல், இனாம் மணியாச்சி விலக்கு அருகே ஒன்றிய மார்க்சிஸ்ட் சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கிளைச் செயலாளர் எம்.அழகுசுப்பு தொடங்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் எம்.தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.ராமசுப்பு, கிருஷ்ணவேணி, பி.மணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.சின்னத்தம்பி, எஸ்.தினேஷ், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in