Last Updated : 20 Aug, 2020 02:52 PM

 

Published : 20 Aug 2020 02:52 PM
Last Updated : 20 Aug 2020 02:52 PM

திமுக திருச்சி மாவட்டத்தில் உட்கட்சிப் பூசல் இருப்பதாகக் கூறுவது அனுமானமே; தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ

திருச்சி

திமுக திருச்சி மாவட்டத்தில் உட்கட்சிப் பூசல் இருப்பதாகக் கூறுவது அனுமானமே என்றார், அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ.

திமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் இன்று (ஆக.20) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் உருவப்படத்துக்குக் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து, கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்டப் பொருளாளர் கோவிந்தராஜ், வண்ணை அரங்கநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

"திருச்சி மாவட்டத்தில் உட்கட்சி பூசல் இருப்பதாகவும், மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறுவது அனுமானம்தான். திமுக தெற்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் உட்பட எந்தவொரு நிகழ்வு நடத்துவதாக இருந்தாலும், முதலில் கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவிடம் கூறிவிட்டுத்தான், எங்கள் மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கே தகவல் கூறுவேன்.

பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பது எனது 'சிஸ்டம்'. எனவே, யார் என்ன விமர்சனம் செய்தாலும் அதை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். யாரையும் பிரித்துப் பார்ப்பதோ அல்லது இப்படி கூறிவிட்டார்களே என்பதை கருத்தில் கொள்ளாமல் கே.என்.நேருவிடம் சென்றுதான் முதலில் ஆலோசனை கேட்பேன்.

ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்துகிறார், திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ.

2-வது தலைநகருக்குத் திருச்சியே பொருத்தமானது...

திருச்சி மாவட்டம் அனைத்து உள்கட்டமைப்புகளும் கொண்ட பகுதி. முன்பெல்லாம் திருச்சியில் இருந்து சென்னை செல்ல 7 அல்லது 8 மணி நேரமாகும். ஆனால், இப்போது மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும். அதேபோல், திருச்சியில் இருந்து மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் குறைந்த பயண நேரத்தில் செல்ல முடியும்.

வேளாண்மை உட்பட அரசின் 10 அல்லது 12 துறைகளை நிர்வகிக்கும் வசதி திருச்சி மாவட்டத்தில் உள்ளது. எனவே, தமிழ்நாட்டின் 2-வது தலைநகராக அறிவிக்க எல்லா வகையிலும் திருச்சி மாவட்டம்தான் பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகராக்க எம்ஜிஆர் விரும்பினார் என்பதைப் பற்றியோ அல்லது அதற்கு முட்டுக்கட்டை எழுந்தது பற்றியோ அல்லது எதற்காக அந்தத் திட்டம் நின்றது என்பது பற்றிய பழைய வரலாறு எல்லாம் எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை, எல்லாவற்றுக்கும் பொருத்தமாக உள்ள திருச்சிக்குத்தான் 2-வது தலைநகர் அந்தஸ்தை தர வேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x