புதுச்சேரியில் பத்து நாட்களுக்கு தளர்வில்லா ஊரடங்கு; முதல்வரிடம் அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் மனு தரும் அதிமுக எம்எல்ஏ அன்பழகன்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் மனு தரும் அதிமுக எம்எல்ஏ அன்பழகன்.
Updated on
1 min read

கரோனாவை கட்டுப்படுத்த புதுச்சேரியில் பத்து நாட்களுக்கு தளர்வில்லா ஊரடங்கை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்துமாறு முதல்வரிடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமியை இன்று (ஆக.20) நேரில் சந்தித்து அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவர் எம்எல்ஏ அன்பழகன் மனு தந்தார்.

அதன் விவரம்:

"கரோனா தொற்றாளர்களுக்கு போதிய படுக்கை வசதிகள் நம்மிடம் இல்லை. இந்நிலையில், மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க பரிசோதனை முறையில் பத்து நாட்களுக்குத் தடை விதிக்கும் விதத்தில் வரும் 25-ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 5-ம் தேதி வரை கடுமையான தளர்வில்லா ஊரடங்கை அறிவிக்க வேண்டும்.

இக்கால கட்டத்தில் 10 தினங்கள் முழுமையாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி பிற மாநிலத்தில் இருந்து நம் மாநிலத்திற்குள் வரும் சுமார் 168 சாலைகளையும் முழுமையாக மூட வேண்டும். இந்த 10 நாட்களுக்கு மின் கட்டணம், வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பத்து நாட்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்களை மக்களுக்கு வழங்கிவிட்டு, உடனடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மக்களின் உயிர் காக்க, மக்களும் வணிகம் சம்பந்தப்பட்டவர்களும் சில தினங்களுக்குள் இதைச் செய்ய முன்வர வேண்டும். இந்த 10 தினங்களுக்குள் முழுமையாக நோய்த் தொற்றைத் தடுக்க கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

புதுச்சேரியில் இயங்கும் அனைத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நட்சத்திர உணவகங்கள், தங்கும் விடுதிகள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். குறிப்பாக, நம் மாநிலத்தில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மூன்று மாத காலத்திற்கு அரசின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.

பரிச்சார்த்தமாக, சின்னஞ்சிறு மாநிலமான நம் புதுச்சேரியில் இந்த நடைமுறையை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்"

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in