

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர் செல்லத்துரை ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கரோனாவால் உயிரிழந்தார்.
வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள காவலர் செல்லத்துரை ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. ஆகவே ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் விஜயன் செல்வராஜ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதையடுத்து மனுவை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தாண்டவன், ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முருகனின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.