

கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை தர மறுத்த தனியார் மருத்துவக் கல்லூர் மருத்துவமனையை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு கையகப்படுத்தியுள்ளது.
புதுவையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஜிப்மர் மற்றும் கதிர்காமம் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டன. வீடுகளில் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் நோய் தொற்று அதிவேகமாக பரவுகிறது. இதனால், புதுவையில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு கோரியது.
ஆனால், 2 தனியார் கல்லூரிகள் மட்டுமே கரோனா நோயாளிகளை ஏற்க முன்வந்தது. மற்ற 5 தனியார் கல்லூரிகள் அரசின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்தன.
இதனால், கரோனா நோயாளிகள் படுக்கையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. படுக்கைகளை பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட மத்திய அரசிடம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புகார் செய்துள்ளார்.
மொத்தமாக 5,000 படுக்கைகள் உட்பட போதிய மருத்துவ வசதிகள் புதுவையில் இருந்தும் கரோனா நோயாளிகள் கஷ்டப்படுகிறார்கள். இதனால், தேவையானதை செய்ய புதுவை அரசை வழிநடத்துங்கள் என்று கிரண்பேடி புகாரில் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூடுதல் படுக்கைகளை பெறுவது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நேற்று (ஆக.19) இரவு நடைபெற்றது.
அதையடுத்து, சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட ஆட்சியருமான அருண், நள்ளிரவில் பிறப்பித்த உத்தரவில், "அரசிடம் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், தேவைப்படும் கரோனா படுக்கைகளை வழங்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த காரணத்தைக் கொண்டும், அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர், அரசு மருத்துவமனைகள் பரிந்துரைக்கும் கரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் திருப்பி அனுப்பக் கூடாது.
கரோனா நோயாளிகளை சேர்க்க மறுத்த அரியூர் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கரோனா மருத்துவமனையாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் புதுவை அரசு எடுத்துள்ளது.
ஏற்கெனவே நகரத்தில் கதிர்காமம் அரசு மருத்துவமனை கோவிட் மருத்துவமனையாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிராமப்புற மக்களுக்காக அரியூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்குள்ள அனைத்து படுக்கை வசதிகளும் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.