ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சான்றிதழை ஆயுள் காலமாக நீட்டிக்க வேண்டும்; திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் எம்.பி: கோப்புப்படம்
திருநாவுக்கரசர் எம்.பி: கோப்புப்படம்
Updated on
1 min read

ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சான்றிதழின் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, திருநாவுக்கரசர் இன்று (ஆக.20) வெளியிட்ட அறிக்கை:

"2013-ம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சுமார் 80 ஆயிரம் பேர் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வில் வெற்றி பெற்றனர். ஆனால், இவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் 7 ஆண்டு காலம் மட்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே இதுவரை வேலை கிடைக்காத 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்கள் காலாவதியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேராசிரியர்களுக்கான மத்திய - மாநில தகுதித் தேர்வுகள் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆயுள் கால சான்றிதழ்களாக வழங்கப்படுகின்றது. பீகார். ஹரியானா போன்ற மாநில அரசுகள் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு சான்றிதழ்களின் காலத்தை ஏற்கெனவே நீட்டித்துள்ளன. அதுபோல் தமிழக அரசும் ஆயுள் கால சான்றிதழ்களாக தகுதி பெற்றவர்களின்சான்றிதழ் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும்.

சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணி கிடைக்காமல் அவதியுறும் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சான்றிதழின் காலத்தை நீட்டித்துத் தந்தால் தான் வருங்காலத்திலாவது அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும். இல்லையெனில் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக அமையும்.

நீண்டகாலமாக பணி நியமனம் கிடைக்காமல் உள்ள பயிற்சி பெற்றவர்களின் அவலம் நீங்கவும், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை முறைப்படுத்தி சரி செய்யவும், 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு விடப்பட்டுள்ள மேற்கண்ட வேண்டுகோளை ஏற்று செயல்படுத்த தமிழக கல்வி அமைச்சரும், தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in