

தட்கல் முறையில் மொத்தம் 50 ஆயிரம் பேருக்கு விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் வருகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:
நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின் கேங்மேன் பணி நியமனங்கள் நடைபெறும். முதல் கட்டமாக சட்டப்பேரவையில் அறிவித்த 5 ஆயிரம் பேருக்கும், 2-ம் கட்டமாக இந்த ஆண்டு அறிவித்த 5 ஆயிரம் பேருக்கும் பணி நியமனம் வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கன மழை பாதிப்பால் பழுதடைந்த மின் கம்பங்கள், மின் கோபுரங்கள் ஒரு வாரத்தில் விரைவாக சரி செய்யப்பட்டு, தற்போது சீரான மின் விநியோகம் அங்கு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்தாண்டு விவசாய மின் இணைப்புக்காக தட்கல் முறையில் 40 ஆயிரம் பேருக்கும் ஏற்கெனவே பதிவு செய்த 10 ஆயிரம் பேருக்கு என மொத்தம் 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படும். தொழிற்சாலை போன்ற நிறுவனங்களுக்கு 20 சதவீதம் மட்டுமே ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் கலந்தாலோசனை செய்து உரிய முடிவு எடுக்கப்படும்.
டாஸ்மாக் ஊழியர்கள்
டாஸ்மாக் நிறுவனத்தை பொறுத்தவரை ஆட்கள் தேர்வு செய்யப்படும்போது நிரந்தர பணி இல்லை என தெளிவுபடுத்தித்தான் அவர்களை தேர்வு செய்தோம். இருந்தபோதும் தற்போது அவர்கள் பணி நிரந்தர கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அளவில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன்பின்னர், எனது தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்றார்.