

புதுவை மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான வைத்திலிங்கத்தின் இளைய சகோதரர் முத்துநாராயணன் பாஜகவில், அக்கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் முன்னிலையில் 2 தினங்களுக்கு முன் இணைந்துள்ளார்.
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை சுதந்திர போராட்ட தியாகியும், புதுவை மாநில முன்னாள் முதல்வருமான வெங்கடாசுப்பா ரெட்டியார் ஆவார்.
இவரைத் தொடர்ந்து, காங்கிரஸில் தீவிர பணியாற்றிய இவரது மகன் வைத்திலிங்கம் புதுச்சேரி முதல்வராக இருந்துள்ளார். தற்போது, காங்கிரஸ் சார்பில் எம்பியாகியுள்ளார்.
தற்போது பாஜகவில் இணைந்துள்ள முத்து நாராயணன் வரும் சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
ஏற்கெனவே முத்துநாராயணன் தனது அண்ணனை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் கண்ணனின் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.