கரோனா தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் பேருந்துகளை செப்.1 முதல் இயக்குவது குறித்து ஆலோசனை

கரோனா தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் பேருந்துகளை செப்.1 முதல் இயக்குவது குறித்து ஆலோசனை
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா தாக்கம் குறைவாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து, மண்டலங்களாக பிரித்து, வரும் 1-ம் தேதி முதல் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு தளர்வுகளுடன் அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சுமார் 75 சதவீத ஊழியர்களைக் கொண்டு பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொது போக்குவரத்து வசதி இல்லாததால் பணியிடங்களுக்கு சென்றுவர மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, தமிழகத்தில் பொது போக்குவரத்து வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து சேவையை தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் போராட்டம் அறிவித்துள்ளன.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘ஊரடங்கில் அதிக தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், பல நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இ-பாஸ் நடைமுறையும் எளிதாக்கப்பட்டுள்ளதால், பலரும் இ-பாஸ் பெற்று அவசரத் தேவைகளுக்கு சென்று வருவார்கள். வெளியூர்களில் இருந்து மீண்டும் சென்னை திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தவிர, தனியார் வாகனங்களை நம்பியே பயணம் செய்வதால், செலவு அதிகரிக்கிறது. எனவே, மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் கரோனா தாக்கம் குறைவாக பகுதிகளாக தேர்வு செய்து, பல்வேறு மண்டலங்களாக பிரித்து, வரும் 1-ம் தேதி முதல் பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

பேருந்துகளை தொடர்ந்து பராமரித்தும், கிருமிநாசினிகள் மூலம் தூய்மைப்படுத்தியும் தயார் நிலையில் வைத்துள்ளோம். அரசு அறிவித்தவுடன் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம். இருக்கிறோம்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in