

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யில் மாட்டுச்சாணத்தால் தயாரிக் கப்பட்ட விநாயகர் சிலைகள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருட்களுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு சீசனுக்கு ஏற்ப மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆக.22-ல் சதுர்த்தி என்பதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர்.
மேலும் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளதால், பெரிய சிலைகளைத் தயாரிக் காமல், சிறிய அளவிலான சிலைகளைத் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், மானாமதுரை அருகே குஞ்சுக்காரனேந்தலில் மாரிமுத்து, அவரது மனைவி தீபா ஆகிய இருவரும் மாட்டுச் சாணத்தால் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். இதில் எந்த மண் வகையையும் சேர்க் காமல் மாட்டுச்சாணத்துடன் கடுக்காய் உள்ளிட்ட 13 வகைப் பொருட்களைச் சேர்த்து விநாயகர் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தம்பதியினர் கூறுகையில், மாட்டுச்சாணத்தால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் வரவேற்பு உள்ளது. இதனால், அங்குள்ள தமிழர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் விநாயகர் சிலைகளை செய்து சரக்கு விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்கிறோம், என்றனர்.