

அதிமுகவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளராக இருந்த முன்னாள் எம்.பி லட்சுமணன் இரு தினங்களுக்கு முன் சென்னையில் ஸ்டாலின் முன்னிலையின் திமுகவில் இணைந்தார்.
இது குறித்து விழுப்புரம் திமுக நிர்வாகிகளிடம் பேசிய போது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:
திமுக விழுப்புரம் மாவட்டத்தில் முழு பலத்துடன் உள்ளது. இவர் வருகையால் கூடுதல் பலம் பெற்றுள்ளது. விக்கிரவாண்டி இடை தேர்தலிலின் போது, ‘மாவட்டத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை திமுக புறந்தள்ளுகிறது’ என்ற குற்றச்சாற்று எழுந்ததால், அச்சமூகத்தை சேர்ந்தவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உடனே கட்சிப் பதவியும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை என்பது நிலைப்பாடு. ஆனால், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலால் இந்த நிலைப்பாடை மாற்றிக் கொள்ளவேண்டிய சூழலுக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மதிமுக பொருளாளராக இருந்த மாசிலாமணி திமுகவில் இணைந்தவுடன் அவருக்கு மயிலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
லட்சுமணனின் வருகையால் விழுப்புரம் மாவட்ட திமுகவில் உள்ள இரண்டாம் கட்ட பிரமுகர்கள் அதிர்ந்துள்ளது உண்மைதான். அதே நேரம் பண பலம் உள்ள இவரால் மட்டுமே உள்ள சிவி சண்முகத்தை எதிர்த்து போட்டியிட முடியும் என தலைமை நம்புகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
அதே நேரம் திமுகவினர் முழு அர்ப்பணிப்போடு தேர்தல் பணியாற்றினால் மட்டுமே லட்சுமணனால் சிவி சண்முகத்தை வெல்ல முடியும். செஞ்சி ராமசந்திரன், ஏ ஜி சம்பத் போல இவரையும் புறந்தள்ள முடியாத நிலையில் தற்போது திமுக உள்ளது என்று தெரிவித்தனர்.
லட்சுமணன் எதிர் முகாமிற்கு சென்றது குறித்து விழுப்புரம் மாவட்ட அதிமுகவினரிடம் கேட்டபோது, “லட்சுமணனுடன் சுமார் 10 பேர் மட்டுமே திமுகவில் இணைந்துள்ளனர். அவருக்கு அதிமுகவில் செல்வாக்கு இல்லை.
சுருக்கமாக சொன்னால் லட்சுமணன் ‘சிங்கிள் மேன்’ அவ்வளவுதான். அவர் திமுகவில் இணைந்ததால் அதிமுகவிற்கு இழப்பு ஏதுமில்லை ” என்று தெரிவித்தனர்.