Published : 20 Aug 2020 07:21 AM
Last Updated : 20 Aug 2020 07:21 AM

வீட்டுக்கு கதவு இல்லாததால் சமைத்த உணவை கழிப்பறையில் வைத்து பயன்படுத்தும் முதியவர்: ஏழைகளுக்கு அரசு உதவிகள் சென்று சேருமா?

வீட்டுக்கு கதவு இல்லாததால் சமைத்த உணவுகளை கழிப்பறையில் வைத்து பாதுகாத்து சாப்பிட்டு வருகிறார் முதியவர் ஒருவர். இவரைப்போல் ஏழ்மையில் உள்ளவர்களை கண்டறிந்து அரசு உதவிகள் சென்று சேர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் கண்டிவாக்கம் கிராமத்தில் வசிப்பவர்குப்பன்(60). இவரது மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். குப்பனுக்கு சில உடல்நல குறைபாடுகளுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. முதியோர் உதவித்தொகை கேட்டுவிண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. ஜமாபந்தியில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கூரை வீட்டில் வசித்து வரும் இவர் வறுமை காரணமாக வீட்டுக்கு கதவுகூட போட முடியவில்லை. எனவே, உணவு சமைத்துவீட்டில் வைத்தால் நாய், பூனைபோன்றவை உணவை சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுகின்றன

இதனால், தான் சமைத்த உணவுகளை அரசு கட்டிக் கொடுத்த கழிப்பறையில் வைத்து பாதுகாத்து சாப்பிடுகிறார். இவருக்கு அரசு உதவிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும், அரசு வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதி இவரைப் போன்ற உண்மையான ஏழைகளுக்கு பயனளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யா ஸ்ரீயிடம் கேட்டபோது, “குப்பன்முதியோர் உதவித் தொகை மட்டுமே கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு 60 வயது முடியஇன்னும் 4 மாதங்கள் இருக்கின்றன. அதன் பிறகுதான் அதை வழங்க முடியும். மற்றபடி அவருக்கு உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளோம். அவரது வீட்டுக்கு கதவை பொருத்தும் நடவடிக்கைக்காக வட்டாட்சியரிடம் விசாரித்து வீட்டின் நிலை குறித்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுள்ளேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x