Published : 20 Aug 2020 07:18 AM
Last Updated : 20 Aug 2020 07:18 AM

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற ஊராட்சி தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே சுதந்திரதினத்தன்று தேசியக் கொடியேற்ற பட்டியலின ஊராட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஆத்துப்பாக்கம் ஊராட்சி. இங்கு கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலின பெண்ணான அமிர்தம் போட்டியிட்டு ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அமிர்தம் தலைவர் பதவியை ஏற்றது முதலே, சாதிய பாகுபாடு காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் அமரக் கூடாது, 100 நாள் வேலையை பார்வையிடக் கூடாது, ஊராட்சி கணக்கு வழக்குகளை பார்க்கக் கூடாது என புறக்கணிக்கப்பட்டு வருவதாக அமிர்தம் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சுதந்திர தினத்தன்று ஆத்துப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசியக் கொடி ஏற்ற, அமிர்தத்துக்கு அழைப்பு விடுத்த தலைமை ஆசிரியர், பிறகு தேசிய கொடி ஏற்ற வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதற்கும் சாதி பாகுபாடுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாகநேற்று ஆட்சியர் மகேஸ்வரிகூறும்போது, ``பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா நடத்திய விசாரணை அடிப்படையில், ஆத்துப்பாக்கம் ஊராட்சி செயலர்சசிகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’’ என்றார்.

மேலும், ஊராட்சித் தலைவர் அமிர்தத்தை நேற்று மாலை அலுவலகத்துக்கு வரவழைத்த ஆட்சியர் ``தைரியமாக மக்கள் பணி ஆற்ற உங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்’’ என்றார்.

கமல்ஹாசன், சரத்குமார் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தத்துக்கு நடைபெற்ற அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல். சாதிப் பிணி ஒழிய, நம் குரல்கள் ஒன்றுபடாவிட்டால் குரலற்றவர்களின் குரல்வளை நெரிக்கப்படுவது தொடரும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வரை குரல் கொடுப்போம்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தத்துக்கு, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றும் அனுமதி மறுக்கப்பட்டதற்கும் அதுதொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டதற்கும் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x