

கோவை மாநகராட்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில், இந்தி மொழி குறித்து கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, சர்ச்சைகள் எழுந்தன.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 83 பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விண்ணப்பப் படிவத்தில் இந்தி மொழி குறித்து கேட்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் இருமொழி கல்விக் கொள்கையே நீடிக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால், சித்தாப்புதூர் மாநகராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தில், 14-வது கேள்வியில் இந்தி மொழி படிக்க விருப்பம் உள்ளதா அல்லது கைத்தொழில் பாடம் எடுக்க விருப்பம் உள்ளதா எனக் கேட்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி விட்டதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த விண்ணப்பப் படிவங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும்போது,‘‘மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் இந்தி ஆசிரியர்களே இல்லை. அவ்வாறு இருக்கும்போது, இந்தி மொழி தேர்வு செய்ய விருப்பமா என எவ்வாறு விண்ணப்பத்தில் கேட்டிருக்க முடியும். சம்பந்தப்பட்ட விண்ணப்பம் மாநகராட்சி சார்பில் வழங்கப்படவில்லை. மாநகராட்சியால் வழங்கப்படும் விண்ணப்பத்தில் இந்தி மொழி குறித்த கேள்வியே இல்லை. தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், மாநகராட்சிப் பள்ளி சார்பில் இந்த விண்ணப்பம் தன்னிச்சையாக வழங்கப்பட்டு இருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.