Published : 20 Aug 2020 07:10 AM
Last Updated : 20 Aug 2020 07:10 AM

விநாயகர் சிலை செய்யும் இடத்துக்கு சீல் வைக்க எதிர்ப்பு: சாலை மறியல் செய்த பாஜக நிர்வாகி உட்பட 10 பேர் கைது

காஞ்சிபுரம்-வாலாஜாபாத் சாலையில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் ஆயிரக்கணக்கில் செய்யப்படும். இந்த ஆண்டும் விநாயகர்சதுர்த்திக்காக நூற்றுக்கணக்கான சிலைகள் செய்யப்பட்டுள்ளன. பலர் சிலை செய்வதற்கு முன்பணம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா அச்சத்தால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அரசு தடை விதித்துள்ளது. ஆனால், சில இந்து அமைப்புகள் தடையை மீறி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கப்போவதாக அறிவித்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவிநாயகர் சிலை செய்யும் இடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அய்யம்பேட்டை பகுதியில் அதிகாரிகள் சீல் வைக்கும்போது சிலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் முன்னாள் பாஜக நகரத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் வந்து சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே சீல்வைக்கிறோம். சிறிய சிலைகளை செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்தனர்.

ஆனால், இதை ஏற்க மறுத்த சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பாஜகவினர் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சீலை அகற்ற முயன்றனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு அதிரடிப்படை போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டது, பேரிடர் நேரத்தில் அனுமதியில்லாமல் கூடியது ஆகிய காரணங்களுக்காக 10 பேரை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தின்போது மற்றவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x