

விநாயகர் சதுர்த்தி சிறப்பு சந்தை இந்த ஆண்டு நடைபெறாது என்று கோயம்பேடு சந்தை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலங்களில், பூஜைகளுக்கு தேவையான பொருட்களை மலிவான விலையில் ஒரே இடத்தில் வாங்கிச் செல்லும் வகையில் கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு சந்தைகள் நடத்தப்பட்டு வந்தன. குறிப்பாக பொங்கல், ஆயுத பூஜை ஆகிய பண்டிகைகளின்போது சிறப்பு சந்தைகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல கடந்த 3 ஆண்டுகளாகவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் மலர் அங்காடி பகுதியில் சிறப்புச் சந்தை நடத்தப்பட்டு வந்தது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்போது கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, காய்கறி, மலர், பழச் சந்தைகள் வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி சிறப்பு சந்தை நடத்த வாய்ப்புள்ளதா என கோயம்பேடு சந்தை நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கூட்டத்தை கட்டுப்படுத்தவே கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. அதனால் கரோனா பரவலை தடுக்கும் வகையில், கோயம்பேடு சந்தையிலோ, பிற பகுதியிலே விநாயகர் சதுர்த்தி சிறப்பு சந்தை நடத்தப்படாது’’ என்றனர்.