Last Updated : 20 Aug, 2020 07:04 AM

 

Published : 20 Aug 2020 07:04 AM
Last Updated : 20 Aug 2020 07:04 AM

தமிழகம் முழுவதும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய குழு கள ஆய்வு; 8 புதிய மணல் குவாரிகளுக்கு விரைவில் அனுமதி: நீதிமன்ற தீர்ப்பின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நடவடிக்கை

கோப்புப் படம்

சென்னை

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்தில் முதல் முறையாகபுதிய மணல் குவாரிகள் அமையவுள்ள இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழு நேரில் கள ஆய்வு செய்துள்ளது. அதனடிப்படையில், 8 புதிய மணல்குவாரிகளுக்கு மாநில சுற்றுச்சூழல்தாக்க மதிப்பீட்டு ஆணையம் விரைவில் அனுமதி வழங்கவுள்ளது.

தமிழகத்தில் ஆற்றுமணல், எம்-சாண்ட் (நொறுக்கப்பட்ட கல்மணல்), வெளிநாட்டு மணல் ஆகியவை விற்கப்படுகின்றன. இருப்பினும் ஆற்று மணலுக்கான தேவை குறையவில்லை. தமிழகத்தில் தற்போது திருச்சி, தஞ்சை,நாகை, வேலூர், கடலூர், விழுப்புரம் உட்பட 10 இடங்களில் ஆற்றுமணல் எடுக்கப்பட்டு, தினமும் 1,500 லாரி லோடு விற்கப்படுகிறது. லாரிகள் மூலம் ஒரு யூனிட் (4.5 டன்), இரண்டு யூனிட், மூன்று யூனிட் என வி்ற்பனையாகின்றன.

ஒரு யூனிட் ஆற்று மணல் அரசுவிலை ரூ.1,596. இந்த விலை மணல் குவாரிக்கும், அது இருப்பு வைக்கப்படும் டெப்போவுக்கும் இடைப்பட்ட தூரத்தைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றுக்கு இடையேயான தூரம் 25 கிலோ மீட்டருக்குள் இருந்தால் ஒரு யூனிட் மணல் ரூ.1,596-க்கு கிடைக்கும். அதற்கு மேற்பட்ட தூரமாக இருந்தால் விலை சற்று கூடுதலாக இருக்கும்.

வேலூர் மாவட்டம், பாலாற்றில் மனிதர்களைக் கொண்டு மட்டுமே மணல் அள்ளப்படுவதால் அதன் விலை மட்டும் ரூ.500 அதிகம். தமிழகத்தில் தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் லோடுமணல் தேவைப்படுகிறது. ஆற்றுமணல் நாள்தோறும் 1,500 லோடும்,எம்-சாண்ட் 15 ஆயிரம் லோடும் கிடைக்கிறது.

தமிழகத்தில் முதல்முறையாக...

இந்நிலையில், மணல் குவாரிதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவின்பேரில், தமிழகத்தில் முதன்முறையாக புதிய மணல் குவாரிகள் அமையவுள்ள இடங்களை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழு நேரில் கள ஆய்வு செய்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி கூறியதாவது:

திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்களில் 8 புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி கேட்டுள்ளோம். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, புதிய மணல் குவாரிகள் அமையவுள்ள இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுநேரடி கள ஆய்வு செய்துள்ளது. இதற்கு முன்பு, பொதுப்பணித் துறை அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் மணல் குவாரிக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.

தற்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாசுக் கட்டுப்பாட்டு வாரியஅதிகாரிகள் குழு புதிய 8 மணல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அதன்அடிப்படையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் குவாரிக்கு அனுமதி வழங்க உள்ளது.

ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு

மேற்கண்ட குழு, புதிய மணல் குவாரிகள் அமையவுள்ள இடங்களில் குவாரியின் பரப்பளவு,அங்கு 5 மீட்டர் ஆழத்தில் எவ்வளவுமணல் இருப்பு உள்ளது என்பதை ஆய்வு செய்ததுடன், அதைச் சுற்றி50 மீட்டர் சுற்றளவுக்கு எவ்வித கட்டுமானங்களோ, 500 மீட்டர் தூரத்துக்கு பாலமோ, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உறை கிணறுகளோ இல்லை என்பன உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.

எடை நிலையம் அமைப்பு

மேலும், ஆற்று மணலை லாரியில் எடுத்துச் செல்லும்போது, அளவுக்கு அதிகமாக மணல் எடுத்துச் செல்வதாக கிராம மக்கள், சமூகஆர்வலர்களும், லாரியில் மணல்குறைவான அளவு கொட்டப்படுவதாக லாரிகளை இயக்குபவர்களும் புகார் கூறி வருகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண,வேலூர் மாவட்டம், வடுகன்தாங்கல் என்ற இடத்தில் உள்ள மணல்டெப்போவில் சோதனை அடிப்படையில் ரூ.9 லட்சத்தில் தற்காலிகலாரி எடை நிலையம் அமைத்துள்ளோம். இதனால், அங்கு எந்தப் புகாருக்கும் இடமில்லாமல் மணல் விற்பனை நடைபெறுகிறது. இதையடுத்து மீதமுள்ள 9 டெப்போக்களிலும் லாரி எடை நிலையம் அமைக்கப்படும். மணல் குவாரி மூடப்படும்போது லாரி எடை நிலையம், புதிய மணல் குவாரிக்கு இடமாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x