Published : 20 Aug 2020 06:58 AM
Last Updated : 20 Aug 2020 06:58 AM

கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கான மருத்துவ கண்காணிப்பு மையம்: சென்னையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசுபொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றில்இருந்து குணமடைந்தவர்களுக் கான மருத்துவ கண்காணிப்புமையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் தேரணிராஜன்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 49,654 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 89,787 பேர் (83 சதவீதம்) முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றாளர்களுக்கு நீண்டகால பின்விளைவுகளாக நுரையீரல் சார்ந்த நோய்கள், பக்கவாதம், மாரடைப்பு, சர்க்கரை,சிறுநீரக நோய்கள், மன அழுத்தம், உடல் சோர்வு போன்றவை ஏற்படவாய்ப்பு உள்ளது. அதனால், தீவிரஐசியுவில் சிகிச்சை பெற்று தொற்றில் இருந்து குணமடைந்த 4 வாரங்களுக்கு பின்பு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள் இம்மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களும் இங்கு பயன்பெறலாம். இம்மையத்தில் காத்திருப்போர் அறை, பதிவு செய்யும் இடம், ரத்த மாதிரி கொடுக்கும் இடம், உடல் பரிசோதனை அறை, இசிஜி, சிடிஸ்கேன், மருத்துவர் அறை, உணவுஆலோசனை, யோகா, மனநல ஆலோசனை மையம், பிளாஸ்மா தானம் செய்ய பதிவு செய்யும் இடம், பரிசோதனை அறிக்கை வழங்கும் இடம் மற்றும் மருந்தகம் போன்ற வசதிகள் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 7 மணி முதல்மதியம் 2 மணி வரை மையம் செயல்படும். படிப்படியாக மற்ற அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த மையம் தொடங்கப்படும். காங்கிரஸ் எம்பி எச்.வசந்தகுமார் தற்போது செயற்கை சுவாசத்தில் உள்ளார்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x