

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ரூ.40 லட்சத்தில் தரமில்லாத தார்சாலை அமைக்கப்படுவதாக கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை அருகே சிவகங்கை மெயின் சாலையில் இருந்து 2 கி.மீட்டரில் நத்தபுரக்கி கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்ததால் புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து ஒன்றிய நிதி ரூ.40 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆனால் அச்சாலை தேவையான ஜல்லிக்கற்கள், தார் சேர்க்கப்படாமல் தரமின்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகளாகப் போராடி இச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதையும் தரமற்று அமைத்து வருகின்றனர்.
கையால் பெயர்த்தாலே கற்கள் பெயர்ந்துவிடும் நிலையில் சாலை உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறினர்.