Published : 19 Aug 2020 09:06 PM
Last Updated : 19 Aug 2020 09:06 PM
ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்ட இந்த நிதியை மாவட்ட நிர்வாகமே பேக்கேஜ் டெண்டர் விட்டு அமலாக்கிட மாநில அரசு மாவட்டங்களுக்கு அரசாணை அனுப்பியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளது. இனிமேலாவது பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற மூன்றடுக்கு உள்ளாட்சி மன்றப்பிரதிநிதிகள் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்றார்கள். மத்திய அரசு உள்ளாட்சி மன்றங்களுக்கு 14-வது நிதி ஆணைக்குழு பரிந்துரை அடிப்படையிலான 2019-2020 ஆண்டிற்கான நிதியை அனுப்பியிருந்தது.
ஊராட்சி மன்றங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த நிதியை தேவையான பணிகளுக்கு திட்டமிட்டு மன்றக்கூட்டங்களில் முடிவு செய்து நிறைவேற்றிடும் அதிகாரம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி ஊராட்சி மன்றங்களுக்கே உள்ளது.
ஆனால், ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்ட இந்த நிதியை மாவட்ட நிர்வாகமே பேக்கேஜ் டெண்டர் விட்டு அமலாக்கிட மாநில அரசு மாவட்டங்களுக்கு அரசாணை அனுப்பியது. இதனடிப்படையில் எல்லா மாவட்டங்களிலும் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாவட்ட நிர்வாகங்களே துணை ஆட்சியர் மூலம் பேக்கேஜ் டெண்டர் விட்டு அமலாக்கிட திட்டமிட்டது.
ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடிய மாநில அரசின் இம்முடிவை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட நிர்வாகம் பேக்கேஜ் டெண்டர் விட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது,
தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை ஆண்டுதோறும் மாவட்ட ஊராட்சி நிர்வாகங்களே நிறைவேற்றி வருகின்றன. 2019 - 2020 நிதியாண்டிற்கான சாலை மேம்பாட்டிற்காக மாநில அரசு ரூபாய் 1200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
எந்தெந்த சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டுமென்பதை ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து ஆலோசனைகளைப் பெற்று டெண்டர் விட்டு திட்டங்களை நிறைவேற்றிடும் அதிகாரம் மாவட்ட ஊராட்சி மன்றங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், மாநில அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் அடிப்படையில் மாவட்ட துணை ஆட்சியர் மூலம் எல்லா மாவட்டங்களிலும் ரூபாய் 1200 கோடிக்கும் பேக்கேஜ் டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. மாநில அரசின் இந்த முடிவு மாவட்ட ஊராட்சிகளின் அதிகாரங்களை பறிப்பதே ஆகும்.
இதைப்போலவே, மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியங்கள் பராமரித்து வரக்கூடிய அரசுப்பள்ளி கட்டிட பராமரிப்புக்காக மாநில அரசு (2019-2020) ரூபாய் 100 கோடி ஒதுக்கியுள்ளது. இந்நிதியை ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் பள்ளிகளை தேர்வு செய்து டெண்டர் விட்டு திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.
ஆனால், மாநில அரசினுடைய அரசாணையின்படி ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிட பராமரிப்புக்கான நிதியை மாநில முழுவதும மாவட்ட துணை ஆட்சியர்களே பேக்கேஜ் டெண்டர் விட்டு திட்டங்களை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசின் இந்த நடவடிக்கை ஊராட்சி ஒன்றியங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை பறிப்பதாகும்.
ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கக்கூடிய அடிப்படையில் மாநில அரசு மாவட்ட துணை ஆட்சியர்கள் மூலம் பேக்கேஜ் டெண்டர் விடுவதையும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை பறிப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கண்டிக்கிறது.
வழங்கப்பட்டுள்ள பேக்கேஜ் டெண்டர்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், சாலைகள் மேம்பாடு, அரசுப்பள்ளி கட்டிட பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை உள்ளாட்சி மன்றங்களே நிறைவேற்றிட உரிய அதிகாரங்களை வழங்கிட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT