பத்தாம் வகுப்பு தேர்வு; மதிப்பெண்களை வெளியிட தடைகோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

பத்தாம் வகுப்பு தேர்வு; மதிப்பெண்களை வெளியிட தடைகோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி அறிவித்த அரசு, மதிப்பெண்களை அளிக்கக்கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீது, ஏற்கெனவே மதிப்பெண் வெளியிட்டாகிவிட்டது என தமிழக அரசு பதிலை ஏற்று தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி அறிவித்தார். தேர்வு முடிவுகள் வெளியாகி, அனைவருக்கும் மதிப்பெண் அளிக்கப்பட்டது.

தேர்வு முடிவினை வெளியிடும் போது மாணவர்களின் மதிப்பெண்களை வெளியிடக் கூடாது, வெறுமனே அவர் தேர்ச்சி பெற்றவரா? இல்லையா? என்பதை மட்டுமே வெளியிட உத்தரவிட வேண்டும் என்று சென்னையை சேர்ந்த வெற்றிசெல்வன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு ப்ளீடர் முனுசாமி, “கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதியே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டு விட்டது.

காலாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 40 சதவீதம், அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 40 சதவீதம், வருகை பதிவின் அடிப்படையில் 20 சதம் என மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.

உரிய நெறிமுறைகளுடன் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு விட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்”. எனக் கேட்டுக்கொண்டார்.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in