

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 124 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 124 கர்ப்பிணிகள் உட்பட 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேக வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, இதுவரை 32 பேருக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கரோனா தடுப்பு தொடர்பு அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் கூறுகையில், "கரோனா சமயத்திலும் கர்ப்பிணிகளை அந்தந்தப் பகுதி கிராமப்புற செவிலியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பிரசவ தேதிக்கு சில நாட்கள் முன்னரே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அதில், பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் புதுக்கோட்டையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் தங்க வைத்து கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிரசவமும் பார்க்கப்படுகிறது.
பிரசவத்துக்குப் பின்னர், அந்தந்தப் பகுதி அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தாய்மார்களிடம் செல்போன் மூலம் தொடர்புகொண்டு ஆலோசனை கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்றார்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி கூறுகையில், "இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 124 கர்ப்பிணிகளுக்கும் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் நலமுடன் உள்ளனர்.
இதுவரை, 10 பேருக்கு சுகப்பிரசவமும், 22 பேருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடைபெற்றுள்ளது. தாய், சேய் நலமுடன் உள்ளனர்.
இதுதவிர, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அண்மையில் திறக்கப்பட்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்திலும் கர்ப்பிணிகளுக்கென நவீன தொழில்நுட்ப வசதியுடன் தனி வார்டும் உள்ளது.
பிரசவம் பார்க்கும் மருத்துவக் குழுவினரின் மனிதநேயம் மிக்க செயல் பாராட்டுக்குறியது.
இத்தகைய பணியில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சுபாஷினி, எகுதா டேவிட், சரவணன், கனிமொழி, அறிவரசன், பாலசுப்பிரமணியன், தீபா, சங்கீதா, முகில்விழி, விமலராணி மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு புதுக்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்" என்றார்.