

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, பசுமையை ஏற்படுத்தும் வகையில் விதை விநாயகர் சிலைகள் தோட்டக்கலைத்துறை சார்பில் விற்பனை செய்யப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் தோறும் களிமண்ணாலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தோட்டக்கலைத்துறையின் டான்ஹோடா சார்பில் கடந்தாண்டு புதிய முயற்சியாக களிமண்ணாலான விநாயகர் சிலை மற்றும் அதனை கரைக்க பயன்படும் தொட்டி, மற்றும் விதையுள்ள விநாயகர் சிலை மற்றும் தோட்டக்கலைபயிர்களின் விதைகள் அடங்கிய தொகுப்பு , செறிவூட்டப்பட்ட தென்னை நார்க்கழிவுகள் அடங்கிய தொகுப்பு ரூ. 200-க்கு விற்கப்பட்டது. நடப்பாண்டில் அதே பசுமை விதை விநாயகர் சிலைகள் ரூ.150-க்கு விற்கப்படுகின்றன.
அதனையொட்டி, மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பசுமை விநாயகர் சிலைகள் ரூ. 150-க்கு விற்கப்படுகின்றன. இதில், விதை விநாயகர் சிலை, தொட்டி, செறிவூட்டப்பட்ட தென்னை நார்க்கழிவுகள், விதை பாக்கெட் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து மதுரை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி கூறுகையில், சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் பசுமை விதை விநாயகர் சிலைகள் இரண்டாம் ஆண்டாக விற்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரையில் அண்ணாநகர் உழவர் சந்தையிலும், சொக்கிகுளம் உழவர் சந்தையிலும் விற்பனை செய்யப்படும், என்றார்.