

வடக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்:
“தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:
காரைக்குடி (சிவகங்கை), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), தேவலா (நீலகிரி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 3 செ.மீ, திருவள்ளூர் (திருவள்ளூர்) 2 செ.மீ.
ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை உருவாகி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிசா பகுதிகளில் நிலவி வருகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.