

தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை விவசாயம் செய்ய மானியம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அதிகளவு செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்துவதால் நாளடைவில் மண்ணின் வளம் குறைந்து சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
செயற்கை உரத்தை அதிகளவு பயன்படுத்துவதால் விளைவிக்கப்படும் காய்கறி மற்றும் பழங்களில் அதன் நச்சுத்தன்மை அதிகளவு படிந்து அதை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகளையும், நோய்களையும் ஏற்படுத்துகிறது.
அதனால், விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயத்தை ஊக்கவிக்க தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மானியம் வழங்கி வருகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரேவதி கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்திற்கு இயற்கை விவசாயத்தை ஊக்கவிக்க 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஹேக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை விவசாயம் செய்ய ஒரு ஹேக்டேருக்கு ரூ.2,500 மற்றும் காய்கறி பயிர்கள் விவசாயம் செய்ய ரூ.3,800 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகப்பட்சம் 2 ஹேக்டேருக்கு ஊக்கத்தொகை பெறலாம், ’’ என்றார்.