

தனது விருப்ப மாளிகையை இடித்து அங்கு மக்களுக்குக் குடிநீர் கிடைக்க குளம் அமைத்ததன் நினைவாக அமைக்கப்பட்ட ராஜ்நிவாஸ்-சட்டப்பேரவை நடுவே உள்ள 'ஆயி' மண்டபமும் பராமரிப்பின்றியுள்ளது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸுக்கும்-சட்டப்பேரவைக்கும் எதிரேயுள்ள பாரதிபூங்காவில் அழகாய் அமைந்துள்ளது 'ஆயி' மண்டபம். அத்துடன் இம்மண்டபம்தான் புதுச்சேரி அரசு சின்னம். இந்த மண்டபத்தின் பெயருடைய 'ஆயி' என்பவர் தேவதாசி பெண். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
கடந்த 16-ம் நூற்றாண்டில் பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேலூர் பயணத்தை முடித்து விட்டு புதுவை உழவர் கரையிலுள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவராயரை பார்க்க வந்தார். அப்போது, புதுச்சேரி முத்தரையர்பாளையத்தில் இருந்த மாளிகையை கோயில் என நினைத்து வணங்கினார். ஆனால், அருகில் இருந்தோர் இது தாசியின் வீடு என்றனர். இதையடுத்து, அந்த மாளிகையை மன்னர், இடிக்க உத்தரவிட்டார். தான் ஆசையாக கட்டிய மாளிகையை தானே இடிப்பதாகவும், அதற்கு கால அவகாசமும் தேவதாசி 'ஆயி' கேட்டார். அதை மன்னர் ஏற்றார்.
இதையடுத்து, தான் ஆசையாக கட்டிய மாளிகையை 'ஆயி' இடித்ததுடன், அந்த இடத்தில் தனது செல்வத்தைக் கொண்டு மக்களுக்காக குளத்தை 'ஆயி' உருவாக்கினார். இந்த குளம் புதுவை மக்களுக்கு முக்கிய நீராதாரமாக அமைந்தது.
அதன் பின்னர் 18-ம் நூற்றாண்டில் புதுவையில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அப்போது தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அப்போதைய கவர்னர் போன்டெம்ப்ஸ், பிரான்சில் ஆட்சி செய்த அரசருக்குக் கடிதம் எழுதினார். அதையடுத்து, மூன்றாம் நெப்போலியன் உத்தரவின் பேரில் பொறியாளர் லாமைரெஸ்சே புதுச்சேரி வந்தார்.
16-ம் நூற்றாண்டில் 'ஆயி' வெட்டிய முத்தரையர்பாளையத்திலுள்ள இக்குளத்தில் இருந்து நீளமான வாய்க்கால் வெட்டி தற்போதைய பாரதி பூங்கா வரை கால்வாய் அமைத்தார். அதன் மூலம் புதுவை நகருக்குத் தண்ணீர் வந்தது. புதுவை தண்ணீர் பிரச்சினை தீர்ந்தது தொடர்பாகவும், பொறியாளரை கவுரவிக்க அனுமதி கேட்டும் ஆளுநர் மூன்றாம் நெப்போலியனுக்குக் கடிதம் எழுதினார்.
தாசி குலத்தில் பிறந்து தனது ஆசை மாளிகையை மன்னர் உத்தரவில் இடித்துவிட்டு மக்களுக்காக தனது இடத்தில் குளத்தினை வெட்டிய 'ஆயி'யின் சிறப்பை வியந்த மூன்றாம் நெப்போலியன் புதிய உத்தரவை பிறப்பித்தார். அதனால் 18-ம் நூற்றாண்டில் உருவானது 'ஆயி' மண்டபம்.
கிரேக்க-ரோமானிய கட்டிடக் கலை அம்சத்துடன் வெள்ளை நிறத்தில் பார்ப்போரை கவரும் விதத்தில் அமைந்தது 'ஆயி' மண்டபம். பிற்காலத்தில் 'ஆயி' மண்டபத்தை சுற்றி பாரதி பூங்கா அமைந்தது.
முக்கியமாக நாள்தோறும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும், அமைச்சர்களும் எளிதில் பார்க்கும் வகையில் உள்ள புதுச்சேரி அரசு சின்னமே மோசமாக நிலையில் உள்ளதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். மண்டபம் மேல் சுவர் பூச்சு இன்றி மோசமான நிலையிலுள்ளது.
புதுச்சேரி அருங்காட்சியகம் அறிவன் கூறுகையில், "இது நம் நினைவுச்சின்னம். புதுச்சேரி அரசின் சின்னம் 'ஆயி' மண்டபம். புதுச்சேரி அடையாளமாகவும், புலம் பெயர்ந்து வாழும் புதுச்சேரி மக்களின் அடையாளமாகவும் உள்ளது.
இந்தோ - பிரெஞ்சு உறவின் ஒரு முதன்மையான அடையாளமாகத் திகழும் இக்கட்டிடத்தினை சரியாக பராமரிப்பது அரசு இயந்திரத்தின் அடிப்படைக் கடமையாகும். 'ஆயி' மண்டபத்தின் தெற்கு நோக்கிப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் மாளிகையும், கிழக்கு நோக்கிப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் சட்டப்பேரவையும், வடக்கு நோக்கிப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் கலைப் பண்பாட்டுத் துறையும், ஆவணக் காப்பகமும் அமைதி காப்பது இனியும் நல்லதுக்கு அல்ல!
உடனடியாக மரபு சார்ந்த கட்டிடக் கலைஞர்கள் உதவியுடன் புதுச்சேரியின் பொதுப்பணித்துறை அலுவலகங்களின் நன்முயற்சியில் மீட்டுருவாக்கப்படுவது கட்டாயத் தேவையாகும்.
புதுச்சேரியின் நிலத்தடி நீர் மட்டம் நீராதாரம் இப்போது மிகப்பெரிய கேள்வியாகி வருகிறது. அக்காலத்திலேயே நீருக்கு மதிப்பளித்தவர் ஆயி. 'ஆயி'க்கு மதிப்பளித்து மண்டபத்தை அமைத்தது பிரான்சு அரசு - இந்த வரலாற்றுச் செய்திக்கு மதிப்பளித்து எதிர்காலத்துக்குக் கொண்டுச் செல்ல வேண்டிய மிகப்பெரிய கடமை நமக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.