Published : 19 Aug 2020 02:14 PM
Last Updated : 19 Aug 2020 02:14 PM

விலங்குகளுக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதா?- குமரியில் சூழலியல் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம்

குமரி மாவட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளை வரையறை செய்வதில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இதில் குமரி மாவட்ட மக்களின் நில உரிமை பறிக்கப்படும் அபாயம் இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் குதித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி இந்து தமிழ் இணையத்திடம் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் இதர மாவட்டங்களை ஒப்பிடும்போது சிறிய மாவட்டம். பரப்பளவில் 1,672 சதுர கி.மீ கொண்ட இந்த மாவட்டத்தில் சுமார் 33 சதவீதம் அடர்ந்த காடுகளும், 71 சதுர கி.மீ நீள கடற்கரையும் உள்ளது. இங்கு மொத்தம் 48 மலை கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் சரிபாதி நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது. இது நெருக்கமான குடியிருப்பு பகுதிகளைக் கொண்டது. இங்கு ஒரு சதுர கி.மீ பரப்பளவில், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,119 பேர் வாழ்கின்றனர். எனவே, மக்கள் வசிக்கும் பகுதி மிகவும் பற்றாக்குறையாக உள்ள மாவட்டம் இது.

2004-ம் ஆண்டு பேரழிவை உருவாக்கிய சுனாமி, 2017-ல் ஒக்கி புயலின் தாக்கம் மற்றும் அடிக்கடி ஏற்படும் கடல் ஆக்கிரமிப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் கடற்கரை மக்கள் வாழ வழியின்றி இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடற்கரையில் மத்திய அரசின் திட்டங்கள் பலவும் அவர்களின் எதிர்ப்பை மீறி செயல்படுத்தப்படுகிறது. இதனால் உள்நாட்டு மீனவர்கள் தொழில்வாய்ப்பை இழந்து அவதிப்படுகின்றனர்.

இதேபோல் குமரி மாவட்ட விவசாயத்தின் பெரும்பகுதி மலை அடிவாரங்களில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இங்கு செயல்படுத்தப்பட்டுவரும் கடற்கரை மேலாண்மைச் சட்டம் கடலோர மக்களின் வாழ்வைப் பறிக்கிறது.

அதேபோன்று மாவட்டத்தின் வடபகுதியில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பட்டா நிலத்தைத் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் வனத்துறையின் கீழ் கொண்டுவந்துவிட்டனர். இந்தப் பகுதியில் இருக்கும் விவசாயிகள் ரப்பர் மரங்களை மறு நடவுக்காக வெட்ட முடியவில்லை. பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மத்திய- மாநில அரசுகள் சூழலியல் தாங்குமண்டலம் என்ற கூர்வாளை மக்களின் கழுத்தில் வைத்துள்ளது.

கரோனா காலத்தைப் பயன்படுத்தி பல்வேறு வகையான மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் தன்னிச்சையாக அமல்படுத்தி வருகின்றன. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட யாருடைய கருத்தையும் கேட்பதில்லை. கன்னியாகுமரி மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல.

மக்களின் வாழ்வாதாரப் பகுதிகள் குறைந்து வரும் இச்சிறிய மாவட்டத்தில் கடையால், திற்பரப்பு, தும்பகோடு, பொன்மனை, சுருளோடு, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, சிறமடம், வேளிமலை, அனந்தபுரம், அழகியபாண்டிபுரம், செண்பகராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி, தேரூர், மருங்கூர், குலசேகரம் உள்ளிட்ட 17 வருவாய் கிராமங்களில் பெரும்பகுதி மக்களின் பயன்பாட்டிலிருந்து பறிக்கும் வகையில் சுழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்கும் திட்டத்தினை வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் அறிவித்தன. கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் இது பற்றி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சூழலியல் தாங்கு மண்டலம் அமைக்கும் அரசாணையை வாபஸ் வாங்க வேண்டுமென்று பலரும் முறையிட்டோம். நிறைவுரை ஆற்றிய ஆட்சித்தலைவர் ‘இம்முடிவை நாங்கள் தன்னிச்சையாக எடுக்க மாட்டோம். அரசாணையைத் தமிழாக்கம் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதுடன் சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துவோம்’ என்று உறுதியளித்தார். ஆனால், மாவட்ட நிர்வாகம் ஒத்துக்கொண்டபடி ஆட்சேபனைக்கு எந்த பதிலும் சொல்லாமலும், கிராமவாரியாக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தாமலும், தன்னிச்சையாக சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்கும் திட்டத்தினை அமல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் அரசும், வனத்துறையும் வேகமாக ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்த கரோனா காலத்தை சாதகமாக பயன்படுத்துகின்றனர்.

அதிர்வுதாங்கு மண்டலங்களாக இப்போது குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளில் ஏற்கெனவே திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் புலிகள் சரணாலய எல்லைக்கும் விரிவாக்கம் செய்துள்ளனர். இங்கெல்லாம் காட்டுப் பன்றி, குரங்குகள் விளை நிலங்களையும், குடியிருப்புகளையும் துவம்சம் செய்து வருகின்றன. இதனால் பலநூறு ஆண்டுகளாக 46 காணி குடியிருப்புகளில் வசித்து வரும் மலைவாழ் மக்களின் நிலை பரிதாபகரமாக மாறுகிறது. அவர்கள் முழுக்க முழுக்க காடுகளையும், மலையையும் நம்பி வாழ்பவர்கள். அரசு அறிவிப்புபடி பாய்ன்ட் ஜீரோவிலிருந்து ஆரம்பித்தாலும் இம்மக்கள் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் பகுதிக்குள்ளேதான் சிறைபடுவர். இதனால் வாழ முடியாத நிலையில் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு அகதிகளாக மாறுவர்.

தனியார் வனப்பாதுகாப்பு சட்டம் விவசாயிகள் நிலத்தை அபகரித்தது போல் மேலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாயிகளின் நிலத்தை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தால் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இது விலங்குகளுக்காக மனிதர்களை வேட்டையாடுவது போல் உள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி தொடர் போராட்டங்களையும் முன்னெடுக்க இருக்கிறோம்” என்றார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் வன உயிரினப் பாதுகாப்பு மண்டலம் 40,293 ஹெக்டேர் பரப்புடன் கடந்த 2007-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தொடர்ந்து வன விலங்குகள் நடமாட்டத்திற்கு ஏதுவாக சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க கடந்த 2017-ம் ஆண்டே வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் சூழலியல் மண்டலத்துக்கு 10 கிலோ மீட்டர் வரை எடுக்க அறிவுறுத்தியும், 3 கிலோ மீட்டர் தூரமே அறிவிப்பு செய்யப்பட்டது. இது அந்தப் பகுதிகளை பாதுகாக்கத்தானே தவிர, சிக்கல் உண்டாக்க அல்ல. மேலும், சூழலியல் மண்டலத்துக்குள் நிலம் இருப்பவர்கள் கட்டுமானப் பணியும் செய்யலாம்” என்றனர்.

அதேநேரம் கேரள மாநிலத்தில் சூழலியல் அதிர்வு மண்டலமாக ஒரு கிலோ மீட்டர் தூரமே நிர்ணயிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் குமரி மக்கள் அதேபோல் நடைமுறையை குமரியிலும் பின்பற்றினால் விவசாய நிலங்களும், ஏழைகளின் வீட்டுமனைகளும் காக்கப்படும் எனவும் சொல்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x