Published : 19 Aug 2020 01:54 PM
Last Updated : 19 Aug 2020 01:54 PM

தடையை மீறி விநாயகர் சிலை: நடவடிக்கைக்கோரி மனு: அரசு பார்த்துக்கொள்ளும், உயர் நீதிமன்றம் கருத்து

விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி ஊர்வலம் செல்வோம் என்ற இந்து முன்னணியின் அறிவிப்பின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அன்பழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அரசு தடை விதித்துள்ளது, அரசு உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும், ஆயிரக்கணக்கான சிலைகள் நிறுவப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், பின்னர் ஊர்வலமாக எடுத்து செல்லவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அன்பழகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த பொது நலமனுவில், “ஏற்கெனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்க வேண்டும்.

இந்து முன்னணியினர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம் என தெரிவித்துள்ளனர். அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும், தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மற்றும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசு சார்பில் தடைவிதிக்கப்பட்டு வெளியிடப்பட்ட உத்தரவை அளித்தனர்.
அதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தமிழக அரசு ஏற்கெனவே தடை விதித்துள்ளது என தெரிவித்தனர். அப்போது, மனுதாரர் தரப்பில், அரசின் தடை உத்தரவை மீறுவோம் என இந்து முன்னணியின் வெளிப்படையாக மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் எனவும் விளக்கமளித்து, இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இதேப்போன்று தடையை மீறி விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிடக் கோரி திருவண்ணாமலையை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி, இளஞ்செழியன் வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x