

தூத்துக்குடியில் கொல்லப்பட்ட காவலர் சுப்ரமணியனின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காவலர் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ளார்.
நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் மணக்கரை சந்திப்புக்கு சென்றனர்.
காவல் துறையினரைப் பார்த்த துரைமுத்து மற்றும் அவனது சகோதரன் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து, காவல் துறையினர் அவர்களைத் துரத்திப் பிடிக்க முற்பட்டனர். அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல் துறையினர் மீது வீசியதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கினார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவரது முகநூல் பதிவு:
“தூத்துக்குடியில், காவலர் சுப்பிரமணியன் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பணியில் உயிரிழந்த காவலருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து - அவரது குடும்பத்திற்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க, பணியில் இருக்கும் காவலர்களின் பாதுகாப்பினைத் தமிழகக் காவல்துறை உறுதிசெய்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.