திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவுத் திட்டம்; அமைச்சர் நடராஜன் கோரிக்கை

இலவச முகக்கவசங்களை வழங்கும் அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி. உடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.
இலவச முகக்கவசங்களை வழங்கும் அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி. உடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகரமாக்க வேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவுத் திட்டம் என, அமைச்சர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் இலவச முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஆக.19) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன், மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு முகக்கவசம் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் என்.நடராஜன் கூறியதாவது:

"திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகரமாக்க வேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவுத் திட்டம்.

சர்வதேச விமான நிலையம், ஆசியாவிலேயே தலைசிறந்த ரயில் போக்குவரத்து, மத்திய தொழிற்சாலைகள், எந்தக் காலத்திலும் குடிநீர் பஞ்சமே நேரிடாத வகையில் ஓடும் அகண்ட காவிரி என அனைத்து அம்சங்களும், வளங்களும் திருச்சி மாவட்டத்தில் உண்டு.

தொலைநோக்குச் சிந்தனையோடுதான் திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகரமாக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதை விரும்புவதாகவும் கூறினார். ஆனால், அப்போது கருணாநிதி அதை எதிர்த்தார்.

இதனிடையே, உடல் நலக்குறைவால் எம்.ஜி.ஆர். இறந்துவிட்டதால் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் 2-வது தலைநகரம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரது பார்வைக்கு எடுத்துச் சென்று எம்ஜிஆரின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்வோம்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in