

முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கவிடாமல் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. கூடுதல் நீரை வெளியேற்றுவதால் கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக சாகுபடி ஒரு போகமாக மாறும் அபாயம் உருவாகி உள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் முல்லை பெரியாறு அணை மூலம் 14,707 ஏக்கரில் இரு போக சாகுபடி நடந்து வரு கிறது. 1979-ம் ஆண்டு 152 அடி நீர் தேக்க கேரள அரசு தடை விதித்தது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின் 142 அடி வரை நீர் தேக்கலாம் என 26.4.2014-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பேபி அணையைப் பலப்படுத்தி 152 அடி வரை நீர் தேக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
ஆனால், 142 அடியைக்கூட தேக்கவிடாமல் கேரள அரசு ஆண்டுதோறும் பல்வேறு இடையூறுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, தென்மேற்குப் பருவ மழைக் காலத்தில் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயரும்போது கேரள அதிகாரிகள், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால், அணையிலிருந்து வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் நீர் திறக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் 142 அடி நீர் தேக்க முடியாத நிலை தொடர்கிறது. இந்த ஆண்டு கம்பம் பள்ளத் தாக்கு முதல்போக சாகுபடிக்கு ஆக.13-ம் தேதி நீர் திறக்கப்பட்டது. இதில் பாசனத்துக்கு விநாடிக்கு 200 கன அடியும், தேனி மாவட்ட குடிநீருக்கு 100 கன அடியும் திறக் கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை 2,160 கன அடிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
பருவமழை நிறைவடையும் நிலையில் கூடுதல் நீர்திறப்பதால் அணையின் நீர்மட்டம் வெகுவாய் குறைந்துவிடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐந்து மாவட்ட பெரியாறு- வைகை பாசன நீர் விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் கூறியதாவது: தென் மேற்குப் பருவமழை குறையத் தொடங்கிய நிலையில் கூடுதல் நீரை வெளியேற்றினால் இனி வரும் வாரங்களில் பற்றாக்குறை ஏற்படும். எனவே, பெரியாறு அணை நீர் வெளியேற்றத்தைப் பொதுப்பணித் துறை முறைப்படுத்த வேண்டும், என்றார்.
தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு பாதகமாகவே நடக்கிறது. பேபி அணையைப் பலப்படுத்த 3 முறை தமிழகஅரசு திட்ட மதிப்பீடு தயார் செய்தும் கேரளா ஒத்துழைக்கவில்லை. பேபி அணையைப் பலப்படுத்தத் தேவையான கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்லும் பாதையைத் திட்டமிட்டே சீரமைக்காமல் உள்ளனர்.
தற்போது அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் கெடுபிடி செய்கின்றனர். இருப் பினும் கூடுதலாக வெளியேற்றும் நீரை வைகை அணையில் தேக்கி மதுரை உட்பட பிற மாவட்ட குடிநீர், பாசனத்தேவைக்குப் பயன்படுத்தலாம், என்றனர்.