Published : 19 Aug 2020 12:13 PM
Last Updated : 19 Aug 2020 12:13 PM

கரோனா தொற்றால் குணமடைந்தவர்களுக்குக் கண்காணிப்பு மையம்; நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடக்கம்; அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா தொற்றால் குணமடைந்தவர்களுக்கான கண்காணிப்பு மையம் நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (ஆக.19) அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. சிலருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து குணமடைய செய்கின்றனர்.

நாட்டிலேயே முதன்முறையாக குணமடைந்தவர்கள் கண்காணிப்பு மையம் தமிழக அரசு சார்பில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்திருந்தாலும் கூட, நுரையீரல் பிரச்சினைகள், ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படலாம். அவர்களுக்குத் தொடர் கண்காணிப்பு மிக அவசியம். அவர்களின் நீண்ட கால நலனின் அவசியத்தைக் கருதி, அவர்கள் தங்களை தொடர்ந்து கண்காணித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, கோவிட் தொற்றால் குணமடைந்தவர்களுக்கான கண்காணிப்பு மையத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதன்முதலாக தொடங்கியிருக்கிறோம்.

அவர்களுக்கென தனியே சிறப்பு மருத்துவக் குழுவை நியமித்துள்ளோம். அதிநவீன உபகரணங்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தாலும் இங்கு கண்காணிப்புக்காக அவர்கள் வரலாம். இங்கு தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.

இது நாட்டிலேயே புதிய முயற்சியாக அமைந்துள்ளது. அவர்களுக்கு மன வலிமையை கொடுக்கும் வகையில் இது சிறப்பாக செயல்படும்"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x