தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்; சரத்குமார் வலியுறுத்தல்

சரத்குமார்: கோப்புப்படம்
சரத்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சரத்குமார் இன்று (ஆக.19) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் பெரும்பாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில், எளிமையாக மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்ல, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

பொருளாதார பின்னடைவை சீர்செய்வதற்கான நடவடிக்கையாக பல வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புசாரா தொழில்கள் செயல்பட தமிழக அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருப்பதால், படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், சுய வாகனம் இல்லாத மக்கள் சிரமமின்றி தங்கள் பணியிடங்களுக்குச் சென்று வரவும், அவசிய தேவைகளுக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கும் தனியார் வாகனங்களை பயன்படுத்தும் போது அதிக பொருளாதாரத்தை இழக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

சுய வாகனம் இல்லாமல், தினசரி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள பணியாளர்களும், கட்டிட தொழிலாளர்களும், மின்சார சம்பந்தமான வேலை செய்பவர்களும், பிளம்பர்களுக்கும் மொத்தத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று பணிபுரியும் அனைவரும் பொது போக்குவரத்து சேவை எப்போது தொடங்கப்படும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்கு பொது போக்குவரத்து அவசியம் என கருதுகிறேன்.

முகக்கவசம் கட்டாயம் அணியும் போதும், 3 அடி தொலைவுக்கு ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை பராமரிக்கிறபோதும், கிருமிநாசினி தெளித்து வாகனத்தை துப்புரவாக வைத்துக் கொள்ளும்போதும் தொற்று பரவும் வாய்ப்பு குறையும் என நம்புகிறேன்.

வேலைக்குச் சென்றால் தான் அன்றைய தின வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ள எளிய தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் கடினமான சூழலை கருத்தில் கொண்டு குறைந்த செலவில் ஏதுவாக பயணம் மேற்கொள்ள, உரிய வழிகாட்டு நெறிமுறையுடன் பொது போக்குவரத்திற்கு முதல்வர் அனுமதியளிக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in