Published : 19 Aug 2020 11:31 AM
Last Updated : 19 Aug 2020 11:31 AM

கன்னிப்பூ நெல் அறுவடைக்கு ஆயத்தமாகும் குமரி விவசாயிகள்: அறுவடை இயந்திரங்களுக்கு போட்டிபோட்டு முன்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ அறுவடை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பெரியகுளம் ஏலா வயல்பரப்பில் விளைந்த நெல்மணிகளுடன் காணப்படும் பயிர்கள். படம்: எல்.மோகன்

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் அறுவடைக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். கரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் வெளிமாவட்ட அறுவடை இயந்திரங்கள் போட்டிபோட்டு முன்பதிவு செய்யப்படுகின்றன.

குமரியில் கடந்த ஆண்டு போதியமழை இல்லாததால் மொத்த பரப்பளவில் பாதியளவான 3,000 ஹெக்டேரில் மட்டுமே கும்பப்பூ நெல்சாகுபடி செய்யப்பட்டது. நெல்லுக்கு தட்டுப்பாடு நிலவியதால், அறுவடையான நெல்லுக்கு நல்ல விலை கிடைத்தது. விவசாயிகள் லாபம் பெற்றனர். இந்த ஆண்டு கன்னிப்பூ சாகுபடி பணிகள் தொடங்கும் முன்பே தென்மேற்கு பருவமழை கைகொடுத்தது. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள 6,500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் போதிய நீர் கையிருப்பு உள்ளதாலும், பருவமழை கைகொடுத்து வருவதாலும் சாகுபடி செய்யப்பட்ட அனைத்து பகுதிகளிலும் பயிர்கள் நல்ல மகசூல் தரும் நிலையில் உள்ளன. நடவு செய்து 120 நாட்களுக்குள் அறுவடையாகும் கட்டைரகமான அம்பை-16 நெற்பயிர்கள் வயல்களில் அறுவடை தருவாயை எட்டியுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்தி நடவு செய்த சுசீந்திரம், தேரூர், பறக்கை பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கும்.

இம்மாத இறுதிக்குள் இறச்சகுளம், பூதப்பாண்டி, மணவாளகுறிச்சியை அடுத்துள்ள பெரியகுளம் ஏலா, ஆசாரிபள்ளம் அருகே வேம்பனூர் ஏலா பகுதிகளில் அறுவடை மும்முரமாகும். மீதமுள்ள பகுதிகளில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை நெல் அறுவடை நடைபெறும்.

கரோனா ஊரடங்குக்கு மத்தியில் நெல் அறுவடை பணிக்காக திருச்சி, தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களில் இருந்தும், மதுரைபகுதிகளில் இருந்தும் நெல் அறுவடை இயந்திரங்கள் இந்த வாரஇறுதியில் குமரிக்கு வரவுள்ளன.நெல் அறுவடை இயந்திரங்களுக்கான முன்பதிவுக்கு விவசாயிகள் மத்தியில் போட்டி நிலவுகிறது. குமரியில் வேளாண்துறைக்கு சொந்தமான அறுவடை இயந்திரங்கள் இருந்தாலும், இவற்றால், மாவட்டத்தில் உள்ள 10 சதவீதம் வயல்களில் மட்டுமே அறுவடை செய்ய முடியும். இதனால், அறுவடை இயந்திரங்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது.

பெரியகுளம் ஏலாவில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறும்போது, “ஊரடங்கால் விவசாயிகள் செலவுக்கே பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடவு செய்த கன்னிப்பூ சாகுபடி பயிர்கள் அனைத்தும் நல்ல மகசூல் கொடுக்கும் தருவாயில், கொத்துகொத்தாக நெல் மணிகளுடன் காட்சியளிக்கிறது. மழையும் நின்றுள்ளது. இதனால் எவ்வித இடர்பாடுகளும் இன்றி நெல் அறுவடையாகும் என நம்புகிறோம்.

வேளாண்துறையின் பரிந்துரைப்படி அம்பை-16 ரகம் உரிய அளவில் கைகொடுத்துள்ளது. நெல்அறுவடை இயந்திரத்துக்கு ஒருமணி நேரத்துக்கு ரூ. 2,500 முதல்வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பேரிழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு கன்னிப்பூ நெல் அறுவடை மூலம் நல்ல வருவாய் கிடைத்து மீண்டும் வாழ்வாதாரம் பெறுவோம் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.1,900-க்கு மேல் விற்பனையாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும். இதன்பிறகே, தனியார் நெல்அரவை ஆலை உரிமையாளர்களும், வியாபாரிகளும் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய முன்வருவர். பேச்சிப்பாறையில் 33 அடியும், பெருஞ்சாணியில் 62 அடியும் என நல்ல நீர்இருப்பு உள்ளதால் அடுத்த கும்பப்பூ சாகுபடியும் சிறப்பாக நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், விரைவில் கும்பப்பூ சாகுபடிக்கான பொன்மணி ரகம் நெல் நாற்றங்கால் பாவும் பணியையும் தொடங்க உள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x