Published : 19 Aug 2020 07:38 AM
Last Updated : 19 Aug 2020 07:38 AM

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆண்டுக்கு 8 லட்சம் டன் நச்சுக் கழிவு வெளியேற்றம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பின் சாராம்சம்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்துஆண்டுக்கு 8 லட்சம் டன் அபாயகரமான நச்சுக் கழிவுகள்வெளியேற்றப்படுவது அதிர்ச்சிகரமானது. இயற்கையை மாசுபடுத்தும் தொழிற்சாலையால் கிடைக்கும் ஆதாயம், பொருளாதாரத்தைவிட சுற்றுச்சூழலை பாதுகாப்பதே முக்கியம். எனவேபொதுமக்கள் நலன் கருதியே ஆலை மூடப்பட்டுள்ளது என்றுதீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதிகள் வழங்கிய 815 பக்க விரிவான தீர்ப்பின் சாராம்சம்:

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறியுள்ள அபாயகரமான நச்சுக் கழிவுகள் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி காற்று, நீர் போன்ற இயற்கை வளங்களை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாற்றுக் கருத்து இல்லை. கழிவு மேலாண்மையில் ஆலை நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை. அதைவிட கொடுமை, குறிப்பிட்ட சில ஆண்டுகளாக முறையான முன்அனுமதி பெறாமலே ஆலை இயக்கப்பட்டுள்ளது. ஆலையை மாசு கட்டுப்பாட்டு வாரியமும் முறையாக கண்காணிக்க தவறியுள்ளது. பராமரிப்பு பணிக்காக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கூற்று ஏற்கும்படி இல்லை.

5 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்களுக்கு கண் எரிச்சல், தொண்டை பாதிப்பு போன்ற கோளாறுகள் ஏற்பட்டுள்ளதை புறம்தள்ள முடியாது. இங்கு மற்ற பகுதிகளைவிட இந்த ஆலை சுற்றுவட்டாரப் பகுதியில் வசிப்பவர்களுக்கு மூளை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுற்றுவட்டார மக்களின் உடல்நலத்தில் ஆலை நிர்வாகம் கவனம் கொள்ளவில்லை.

‘ஆலையை மூடியுள்ளதால் நாட்டின் தாமிர உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால், தாமிர தேவையை பூர்த்தி செய்ய முடியாது. இது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றுஆலை நிர்வாகம் வாதிடுவதை ஏற்க முடியாது. இயற்கையை மாசுபடுத்தும் தொழிற்சாலையால் கிடைக்கும் ஆதாயம், பொருளாதாரத்தைவிட சுற்றுச்சூழலை பாதுகாப்பதே முக்கியம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை திசைதிருப்பவே ஆலையை அரசு மூடியுள்ளது என்ற வாதத்தையும் ஏற்க முடியாது.

ஒரு நாளுக்கு சுமார் 1,200 டன் தாமிரம் உற்பத்தியில் ஈடுபடும் இந்த ஆலை, அதன்மூலம் சுமார் 2,400 டன் நச்சுக் கழிவுகளை வெளியேற்றியுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 8 லட்சம் டன் நச்சுக் கழிவுகள் அப்பகுதியில் வெளியேற்றப்படுவது என்பது அதிர்ச்சிகரமானது.

ஸ்டெர்லைட் தரப்பின் வாதங்கள் காகிதத்தில் எழுத்து வடிவில் பார்க்க நன்றாக இருக்குமே தவிர, நடைமுறைக்கு ஒவ்வாதது. இதுபோன்ற அபாயகரமான தொழிற்சாலையை நிறுவ ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அடிப்படை உரிமையே இல்லை. ஏனென்றால், இதற்கு முன்பே மகாராஷ்டிரா, கோவாவில் மக்களின் எதிர்ப்பால் இந்த ஆலை அங்கு நிறுவப்படவில்லை. அனுமதி ரத்து செய்யப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

அதேநேரம், ‘அரசியல் காரணங்களுக்காக ஆலை மூடப்பட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்’ என்ற ஆலை நிர்வாகத்தின் வாதத்தை ஏற்கவேண்டும் என்றால், தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை நிறுவப்பட்டதும் அரசியல் காரணங்களுக்காகத்தான் எனஎண்ணத் தோன்றுகிறது. நிபந்தனை மீறலின் தாக்கம் சிறிது காலம் கழித்தே வெளியுலகுக்கு தெரியவரும்.

‘உள்நோக்கத்துக்காக இந்த ஆலை மூடப்பட்டது. சிப்காட் வளாகத்தில் உள்ள மிகப்பெரிய ஆலையான தங்களை மட்டுமே பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்ற குற்றச்சாட்டையும் ஆலை நிர்வாகம் நிரூபிக்கவில்லை.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு சரியானது என்பதால் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x