

மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர்மதுராந்தகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சென்னை சோழிங்க நல்லூர் பகுதியைச் சேர்ந்த டோரா கார்த்திக் என்பவரும் அப்பகுதியில் கஞ்சாவிற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
செங்குட்டுவனின் நண்பர் சபரீசன் என்பவருடன் டோராகார்த்திக்குக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, செங்குட்டுவனை கொலை செய்யப்போவதாக டோரா கார்த்திக் சபரீசனிடம் தெரிவித்துள்ளார். இதனைசபரீசன் மூலம் அறிந்து கொண்ட செங்குட்டுவன் கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இவர்களின் திட்டப்படி கடந்த 14-ம் தேதி இரவு டோரா கார்த்திக்கை சபரீசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மது அருந்த மாம்பாக்கம் பகுதிக்கு அழைத்துள்ளார். கார்த்திக் வந்த உடன் மறைந்திருந்த செங்குட்டுவன், சபரீசன் உள்ளிட்ட 6 பேர் கார்த்திக்கை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். பின்னர் மினி வேனில் சடலத்தை ஏற்றிக் கொண்டு முருகம்பாக்கம் கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று சடலத்தை புதைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
கொலை நடத்த இடத்தில் ரத்தம் படிந்த கத்தி, செல்போன் இருப்பதாக அந்தப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சோதனையிட்ட போதுஅது சபரீசனின் செல்போன் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரித்ததில் கார்த்திக் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
இந்த நிலையில் அவர் கூறிய இடத்தில் ஏடிஎஸ்பி பொன்.ராம், டிஎஸ்பி மகேந்திரன் ஆகியோர் தலைமையில் போலீஸார், மருத்துவக் குழுவினர் சென்று கார்த்திக்கின்சடலத்தை தோண்டி எடுத்துபிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாகசெங்குட்டுவன் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.