

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி கரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர், மோட்டார் சைக்கிள் மூலம் தமிழகம் முழுவதும் 75 நாட்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கரூர் மாவட்டம் டி.செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் என்.சிவாஜி (61). இவர், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் 75 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வருகிறார்.
கரூரில் தனது பயணத்தை தொடங்கிய சிவாஜி, நேற்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடியில் அவரது பிரச்சாரத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
சிவாஜி கூறும்போது, ‘ஹெல்மெட் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. இதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இதுவரை 7 ஆயிரம் கி.மீ. தொலைவு பயணம் மேற்கொண்டுள்ளேன். விழிப்புணர்வு பயணத்துக்கு காவல் துறை, அரிமா சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன’ என்றார் அவர்.