பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினை; தனி தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினை; தனி தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை
Updated on
2 min read

பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசின் அணை கட்டும்நடவடிக்கையை தடுக்க தீர்ப்பாயம்அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்துக்கான நீராதார திட்டங்கள், நதிகள் இணைப்பு திட்டங்கள் குறித்து மத்திய ஜல்சக்தி துறைஅமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலர் கே.சண்முகம், மத்திய நீர்வளத் துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனையின்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறுதிட்டங்கள், குறிப்பாக பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய குடிமராமத்து போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தில்6,278 பணிகள் ரூ.1,434 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி 3 ஆண்டுகளில்ரூ.1,000 கோடியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் அறிவிக்கப்பட்டு நடந்து வருகின்றன. இந்நிலையில் சில திட்டங்களுக்கு மத்தியஅரசின் ஒத்துழைப்பை கோருகிறேன்.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தேசிய நீர்மேலாண்மை முகமை (என்டபிள்யூடிஏ) திட்ட அறிக்கையை தயாரித்து, கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு அனுப்பி கருத்து கேட்டது. கல்லணைக்கு பதில் மாயனூர் கதவணை வரை திட்டத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இத்திட்டத்தில் தமிழகத்துக்கு 200 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தேன். இதற்கான இறுதி திட்டஅறிக்கையை தயாரித்து, பணிகளை தொடங்க என்டபிள்யூடிஏவுக்கு உத்தரவிடவேண்டும்.

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பி வைக்க என்டபிள்யூடிஏ-க்கு உத்தரவிட வேண்டும். அடல் புஜால் யோஜனா திட்டத்தில் இந்த ஆண்டுதமிழகத்தையும் சேர்க்க வேண்டும்.

காவிரி மறுவாழ்வு, புனரமைப்புமற்றும் மாசுபாடுகளை அகற்றுதல் திட்டத்தை (நடந்தாய் வாழி காவிரி) அறிவித்துள்ளேன். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.10,700 கோடி ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரமாகவும் தமிழகத்தின் உயிர்நாடியாகவும் காவிரி ஆறு திகழ்கிறது. எனவே, நமாமி கங்கை திட்டம் போன்று இதையும் சிறப்பு திட்டமாக அனுமதித்து, தேசிய திட்டமாக எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவில், அணையைபராமரித்து, இயக்கி கட்டுப்படுத்தும் உரிமையை கொண்ட மாநிலமே, அணை பாதுகாப்பு குறித்தஅனைத்து இயக்க கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கும் வகையில் திருத்தம் செய்ய தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது. மக்களவையில் மசோதா அறிமுகப்படுத்தப்படும்போது இந்த திருத்தமும் இடம் பெற வேண்டும்.

காவிரியில் மேகேதாட்டு என்றஇடத்தில் கர்நாடக அரசு அணைகட்டுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. காவிரியின் வழக்கமான நீர்வரத்தை தடுத்தால் தமிழகம் பாதிக்கப்படும் என்பதால்,மேகேதாட்டு திட்டத்தை நிராகரித்துதிருப்பியனுப்ப மத்திய நீர் ஆணையம், காவிரி நதிநீர் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத்தை மீறி பெண்ணையாற்றின் குறுக்கிலும் கர்நாடக அரசு அணைகட்டி வருகிறது. பேச்சுவார்த்தையால் எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே, இந்த பிரச்சினையை தீர்க்கவிரைவாக தீர்ப்பாயம் ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டில் 34 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்குவதற்கான இணைப்புகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 2021-ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,375 கோடியில், பல்வேறு மாவட்டங்களில் 20 லட்சம் இணைப்புகள் வழங்குவதற்காக ரூ.2,265 கோடி நிதியை ஒதுக்கியுள்ளோம். மீதமுள்ள 14 லட்சம் இணைப்புகள் வழங்க வேறு திட்டங்களுக்கான நிதிகள் திருப்பி விடப்படும். மாநிலத்தின் நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என நம்பு கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in