

புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கத் தவறாத அரசியல் கட்சியினர் ஏனோ பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையிலேயே உள்ள அவரது சிலைகளைப் பராமரிக்கத் தவறுகின்றனர்.
புதுக்கோட்டையில் போக்குவரத்து அதிகமுள்ள இடமான காந்தி பூங்கா, அதிமுக மாவட்ட அலுவலகம் அருகே கடந்த 1970-ல் முன்னாள் முதல்வர் அண்ணாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சிலை, அதன் பீடம், அதைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலி ஆகியவை முற்றிலும் சிதிலமடைந்துள்ளன.
இந்நிலையில் நகராட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசால் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை சீரமைக்கப்பட்டது. அங்கு அண்ணா சிலை சிதிலமடைந்திருப்பது ஏனோ நகராட்சி நிர்வாகத்தினரின் கண்ணில்படவில்லை. அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 15) அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சிலையைச் சுற்றிலும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் நேற்றே கொடிகளைக் கட்டினர்.
அறந்தாங்கியில்…
இதேபோல, அறந்தாங்கி நகரில் சிறைச்சாலை அருகே கடந்த 1975-ல் பீடத்தின் மீது அண்ணா சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது கையில் இருந்த மரத்தினாலான புத்தகமும், அவரது மூக்குக் கண்ணாடியும் காணாமல் போயிற்று. சிலை, சிலைக்கு செல்லும் சிமென்ட் படிக்கட்டு மற்றும் பீடம் அகியவை முற்றிலுமாக சிதிலமடைந்துள்ளன.
கீரனூரில்…
இதேபோல, கீரனூரில் பேருந்து நிலையம் அருகே பீடத்தில் அமர்ந்து புத்தகம் படிப்பது போன்று அமைக்கப்பட்ட அண்ணா சிலையையும் அந்தப் பகுதியினர் கைவிட்டுவிட்டனர்.
இதேபோல மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அண்ணாவை மறந்தே அப்பகுதியினர் அரசியல் செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரபாகரன் கூறும்போது, “அண்ணாவின் கொள்கைகளை கடைபிடித்துவருவதாகக் கூறிவரும் திமுக, அதிமுக-வினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதோடு சரி, அதன்பிறகு சிலைகளைக் கண்டுகொள்வதே இல்லை.
எனவே, சிதிலமடைந்துள்ள அண்ணா சிலைகளை சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தமிழக முதல்வர் உத்தரவிடவேண்டும்” என்றார்.