Published : 18 Aug 2020 09:08 PM
Last Updated : 18 Aug 2020 09:08 PM

அரசியல் விமர்சகர் கர்க சாட்டர்ஜி உயிருக்கு ஆபத்து: குரல் கொடுக்கும்படி மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தல்

மதவெறியர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அறிஞரும் அரசியல் விமர்சகருமான டாக்டர் கர்க சாட்டர்ஜிக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு அளிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்துமாறு, தன்னாட்சித் தமிழகம் மற்றும் மொழி நிகர்மை உரிமை பரப்பியக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆழி செந்தில்நாதன், பா.ச. பாலசிங் ஆகியோர் எழுத்துபூர்வமாகக் கோரிக்கை விடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

''மேற்கு வங்கத்திலும் அசாமிலும் உள்ள பாஜகவினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கர்க சாட்டர்ஜி, அவர் வெளியிட்ட ட்வீட் ஒன்றின் காரணமாக அசாம் அரசால் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அசாம் மாநிலத்தில் கர்க சாட்டர்ஜிக்கு எதிராகப் பாஜகவினரும் பிற அமைப்பினரும் கடுமையாகப் பேசியும் அவரைத் தண்டிக்கவேண்டும் என மிரட்டியும் வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக வங்காளத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்தும், மத்திய அரசு மாநில உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்தும் கர்க சாட்டர்ஜி வங்காளத்திலும் இந்தியா முழுக்கவும் பல பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அனைத்திந்திய தொலைக்காட்சி சேனல்களில் ஆங்கிலம், இந்தி, வங்க மொழிகளில் மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

அண்மையில் குடிரிமை மசோதா தொடர்பாக அசாமில் பெரும் கலவரம் ஏற்பட்டபோது, பங்களாதேஷில் இருந்து குடியேறியவர்கள் என்கிற அடையாளத்தின்கீழ், மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தின் வங்க மொழி பேசும் மக்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள். அப்போது வங்காள மக்களுக்கு ஆதரவாக பேசியதால் கர்க சாட்டர்ஜி அசாமில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில் மன்னராட்சிக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட அரசர் குறித்து கர்க டிவிட்டரில் எழுதிய ஒரு கருத்து சர்ச்சைக்குள்ளானது. கர்கவின் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாமல், அசாம் மாநிலப் பாஜகவினர் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அது தொடர்பான வழக்கு நடந்துவருகிறது. வழக்கின் தொடர்ச்சியாக, அசாம் தலைநகரான குவாஹாத்தியில் உள்ள நீதிமன்றத்தில் கர்க சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அசாமில் தனக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று அச்சப்படும் கர்க தனக்கான உடல்ரீதியிலான பாதுகாப்புக்காக இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக ஊடகங்களில் கர்கவைத் தாக்குவோம் என்றும் கொலைசெய்வோம் என்றும் அசாம் மத வெறியர்கள் தொடர்ந்து பேசிவருகிறார்கள்.

கெளரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என பல அறிஞர்களை இந்துத்துவ சக்திகள் கொன்றிருக்கும் நிலையில், மொழியுரிமைக்கும் வங்க இனமக்களின் தேசிய உரிமைக்கும் கூட்டாட்சிக்கும் குரல்கொடுக்கும், அத்துடன் தமிழ்நாட்டின் நண்பராகவும் இருக்கும், டாக்டர் கர்க சாட்டர்ஜியின் அச்சம் நியாயமானது என்பதை அறிந்து, அவருக்குப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தமாறு, தன்னாட்சித் தமிழகம் அமைப்பும் மொழி நிகர்மை உரிமை பரப்பியக்கமும் கோருகிறது.

அந்தக் கோரிக்கையை வலுப்படுத்துவதற்காக. மத்திய அரசையும் தேசிய மனித உரிமை ஆணையத்தையும் திமுக சார்பிலும் வலியுறுத்த வேண்டுகிறோம்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து உரிய வகையில் நடவடிக்கை எடுப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்ததாக தன்னாட்சித் தமிழகம் மற்றும் மொழி நிகர்மை உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளான பா.ச.பாலசிங், ஆழி செந்தில்நாதன் ஆகியோர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x