Published : 18 Aug 2020 08:17 PM
Last Updated : 18 Aug 2020 08:17 PM

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு  கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

போக்குவரத்துத் துறை முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கும் தொற்று உறுதியானது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. தினசரி 6000-க்கும் குறையாமல் தொற்று எண்ணிக்கை வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் 5000 என்கிற எண்ணிக்கையை கடந்துவிட்டது. தமிழக மொத்த தொற்று எண்ணிக்கை 3.49 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் முன் களப்பணியாளர்கள் போலவே அரசியல்வாதிகளும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் எதிர்பாரா வண்ணம் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு மற்றும் 30-க்கும் மேற்பட்ட திமுக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டனர்.

சமீபத்தில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது சோதனையில் தெரியவந்துள்ளது.

அவருக்கும் அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டது மூவரும் சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர முன்னாள் போக்குவரத்து அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x