

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய வழக்கில் மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலைய வாடகை கடை பணியாளர் சங்கத் தலைவர் ஜாகிர் ஹுசைன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் 185 கடைகள் உள்ளன. கரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து நிலையம் இயங்காததால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் நாங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறோம்.
இந்த கடைகளுக்கு மாநகராட்சிக்கு வாடகை செலுத்த வேண்டியதுள்ளது. பல மாதமாக கடைகள் மூடப்பட்டிருப்பதால் வாடகை கட்ட முடியவில்லை.
எனவே, எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை கட்டுவதிலிருந்து விலக்க அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.